2-வது இன்னிங்ஸில் மிரட்டிய இங்கிலாந்து: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

போப் 196 ரன்கள் எடுத்துக் கடைசியாக ஆட்டமிழந்தார்.
196 ரன்கள் எடுத்த போப்
196 ரன்கள் எடுத்த போப்ANI

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டமும் ஆலி போப்பின் பொறுப்பான இன்னிங்ஸும் 2-வது இன்னிங்ஸில் யாரும் எதிர்பாராத ஸ்கோரைத் தந்துள்ளது. 196 ரன்கள் எடுத்துக் கடைசியாக போப் ஆட்டமிழக்க, 2-வது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. ஹைதராபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் தேவை. பரபரப்பான முடிவுக்கு நாம் தயாராக வேண்டுமா?

3-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருந்தது. போப் 148, ரெஹன் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி 4-வது நாளில் எப்படியும் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவாக எடுத்துவிடும் என நினைத்தால் நிலைமை வேறாக இருந்தது.

150 ரன்களைப் பூர்த்தி செய்த போப், ரெஹன் அடுத்து வந்த ஹார்ட்லியின் துணையுடன் மேலும் மேலும் ரன்களைச் சேர்த்துக்கொண்டே இருந்தார். பேஸ்பால் கிரிக்கெட் என்பது மேல்வரிசை பேட்டர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதை ரெஹனும் அடுத்து வந்த டாம் ஹார்ட்லியும் நிரூபித்தார்கள். மன உறுதியுடன் விளையாடிய ரெஹன், பும்ரா பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை எடுத்ததால் மேலும் எந்தவொரு வாய்ப்பையும் இந்திய அணிக்கு வழங்காமல் அடுத்து வந்த ஹார்ட்லி, அதிரடியாக விளையாடினார். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை மேலேறி வந்து எதிர்கொண்டு பவுண்டரிகள் அடித்தார். இப்படியே போனால் என்ன ஆவது என்கிற உடல்மொழியை இந்திய அணி வீரர்களிடம் காண முடிந்தது. போப் 186 ரன்களில் இருந்தபோது ஸ்லிப் பகுதியில் கேட்சைத் தவறவிட்டார் ராகுல். போப்புக்குக் கிடைக்கும் 2-வது வாழ்க்கை இது.

112, 64, 80 என போப்பின் துணையுடன் இங்கிலாந்தின் கீழ்நடுவரிசைக் கூட்டணி அமர்க்களப்படுத்தியது. எகிறாத, முட்டிக் கீழே சென்ற அஸ்வினின் பந்தால் 34 ரன்களுக்கு போல்ட் ஆனார் ஹார்ட்லி. மார்ட் வுட்டை டக் அவுட் செய்தார் ஜடேஜா. போப்பின் அற்புதமான இரட்டைச் சதத்துக்காக அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால் பும்ராவின் குறைவேகப் பந்து, ஸ்டம்பைத் தகர்த்தது. 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த போப்பை இந்திய வீரர்கள் அனைவரும் அவர் அருகில் சென்று பாராட்டினார்கள்.

இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் 102.1 ஓவர்களில் 420 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

வழக்கமாக இந்திய ஆடுகளங்களில் தடுமாறித் தோற்கும் அணியல்ல இது என்பது இங்கிலாந்து பேட்டர்கள், 2-வது இன்னிங்ஸில் விளையாடிய விதத்தில் உறுதியாகியுள்ளது. இந்த டெஸ்டின் முடிவு எப்படி இருந்தாலும் டெஸ்ட் தொடர் சுவாரசியமாக இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in