ஆஸ்திரேலிய ஓபன்: கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் போபண்ணா

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை போபண்ணா 43 வயது 329 நாள்களில் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் வென்ற மகிழ்ச்சியில் போபண்ணா, எப்டென் இணை
கிராண்ட்ஸ்லாம் வென்ற மகிழ்ச்சியில் போபண்ணா, எப்டென் இணை படம்: https://twitter.com/AustralianOpen

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் இணை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் இணை இத்தாலியைச் சேர்ந்த பொலேலி, வாவஸ்ஸூரி இணையை எதிர்கொண்டது. முதல் செட் டை பிரேக்கரில் முடிய போபண்ணா-எப்டென் இணை 7-6(0) என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 7-5 எனக் கைப்பற்ற போபண்ணா-எப்டென் இணை முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றது.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை போபண்ணா 43 வயது 329 நாள்களில் வென்றுள்ளார். இதன்மூலம், மிக அதிக வயதில் இந்தப் பட்டத்தை வென்றவர் என்கிற பெருமையையும் போபண்ணா பெற்றுள்ளார். 61-வது முயற்சியில் ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை போபண்ணா வென்றுள்ளார். 2017-ல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் போபண்ணா.

ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம் உலகின் நெ. 1 வீரர் என்பதை போபண்ணா ஏற்கெனவே உறுதி செய்துவிட்டார்.

இதுவரை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகியோர் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார்கள். லியாண்டர் பயஸ் 4 முறையும், மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தலா இருமுறையும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டத்தை வென்றுள்ளார்கள். 2009 கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை பட்டத்தைக் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in