ராகுல், ஜடேஜா அபாரம்: இந்தியா 175 ரன்கள் முன்னிலை

ஜடேஜா 81 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
ராகுல், ஜடேஜா அபாரம்: இந்தியா 175 ரன்கள் முன்னிலை
ANI

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் முதல் ஸ்பெல்லை வீசினார். இவரது பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் 23 ரன்களுக்கு டாம் ஹார்ட்லேவின் முதல் சர்வதேச விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

கேஎல் ராகுல் சற்று வேகமாக ரன் குவித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி அமைத்தார். பெரிய கூட்டணியாக மாற வேண்டிய நேரத்தில் பெரிய ஷாட்டுக்கு முயற்சித்து 35 ரன்களுக்கு ரெஹான் அஹமது சுழலில் வீழ்ந்தார்.

கேஎல் ராகுலுடன் இணைந்த ஜடேஜாவும் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் ஓவருக்கு 4-க்கு மேல் இருந்தது. 80 ரன்களைக் கடந்த ராகுலும் பெரிய ஷாட்டுக்கு முயற்சித்து பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.

விக்கெட்டுகள் விழுந்தாலும் இந்திய அணிக்குக் கூட்டணி அமைந்துகொண்டே இருந்தது. ஸ்ரீகர் பரத் வந்தவுடன் ஜடேஜா ரன் வேகத்தைக் குறைத்துக்கொண்டார். இந்த இணையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் தண்டித்தது. ஜடேஜா அரை சதத்தைக் கடந்தார். பரத் அரை சதத்தை நெருங்கியபோது 41 ரன்களுக்கு ஜோ ரூட் சுழலில் எல்பிடபிள்யு ஆனார். அஸ்வின் 1 ரன்னுக்கு ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு, ஜடேஜாவும், அக்‌ஷர் படேல் மீண்டுமொரு கூட்டணியை அமைத்தது. 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்கவில்லை. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 81 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in