ஹைதராபாத் டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!

ஹைதராபாத் டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!
ANI

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாதில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்தின் விளையாடும் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்கினார்கள்.

இங்கிலாந்துக்குத் தொடக்கம் சரியாக அமைந்தது. முதல் விக்கெட்டுக்கு ஸாக் கிராலே மற்றும் பென் டக்கெட் ஆகியோர் வேகமாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்கள். சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியவுடன் முதல் விக்கெட்டாக டக்கெட் 35 ரன்களுக்கு அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். முதல் விக்கெட் விழுந்தவுடன் ஆலி போப், ஸாக் கிராலே ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

ANI

இதன்பிறகு அனுபவமிக்க ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி அமைத்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு அக்‌ஷர் சுழலில் பேர்ஸ்டோ போல்டானார். இதன்பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடைசி நிலை பேட்டர்களை துணைக்கு வைத்துக்கொண்டு அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

ANI

இங்கிலாந்து அணியின் ஸ்கோரும் 200-ஐ தாண்டியது.

சுழற்பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசியதைத் தொடர்ந்து பும்ராவை அழைத்தார் ரோஹித் சர்மா. இதற்குப் பலனாக கடைசி விக்கெட்டாக ஸ்டோக்ஸ் போல்டானார்.

ANI

இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்‌ஷர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ரோஹித் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 39 பந்துகளிலேயே 50 ரன்களைச் சேர்த்தது. ஜெயிஸ்வால் 47 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் சர்மா, ஜேக் லீச் பந்தை தூக்கி அடிக்க முயன்று 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ANI

அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஜெய்ஸ்வால் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை தனது அதிரடியைத் தொடர்ந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஜெயிஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்களுடனும், கில் 43 பந்துகளில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

ANI

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in