ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக கோலி தேர்வு

ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரராக கோலி தேர்வு
ANI

2023-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் விராட் கோலி வென்றுள்ளார்.

2023-ம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. கடந்தாண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து மொத்தம் 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்த அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியிலிருந்து ஜடேஜா மற்றும் அஸ்வின் மட்டுமே இடம்பெற்றுள்ளார்கள். இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 பேட் கம்மின்ஸுக்கு மிக முக்கியமான ஆண்டு. டெஸட் கேப்டனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற கம்மின்ஸ், ஆஷஸை தக்கவைத்தார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்றார். இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கூடுதல் மகுடமாக 2023-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதை வென்றுள்ளார். டிராவிஸ் ஹெட், விராட் கோலி, ஜடேஜா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி கம்மின்ஸ் இந்த விருதை வென்றுள்ளார்.

2023-ல் 24 ஆட்டங்களில் 422 ரன்கள் எடுத்துள்ள கம்மின்ஸ் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் விராட் கோலி 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசியின் விருதை வென்றுள்ளார். பேட்டிங்கில் ரன் மழையைப் பொழிந்த கோலி கடந்தாண்டு மட்டும் 27 ஆட்டங்களில் 1,377 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 1 விக்கெட்டையும், ஃபீல்டிங்கில் 12 கேட்சுகளையும் பிடித்துள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து, இந்திய அணி இறுதி ஆட்டத்துக்குள் நுழைய முக்கியக் காரணமாக இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்தார்.

முன்னதாக, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரருக்கான ஐசிசியின் விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக சூர்யகுமார் யாதவ் வென்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in