உலக சாம்பியனைத் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை

ஆனந்துக்கு அடுத்ததாக நடப்பு உலக சாம்பியனைத் தோற்கடித்த 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
உலக சாம்பியனைத் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை
ANI

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் டிங் லிரனை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் லைவ் ரேட்டிங்கில், விஸ்வநாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி, அதிகப் புள்ளிகளைக் கொண்ட இந்திய வீரர் என்கிற பெருமையை முதல்முறையாகப் பெற்றுள்ளார். மேலும் கிளாசிகல் செஸ் போட்டியில் ஆனந்துக்கு அடுத்ததாக நடப்பு உலக சாம்பியனைத் தோற்கடித்த 2-வது இந்திய வீரர் என்கிற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் போட்டியிலும் இதே ஜனவரி 17 அன்று இதே கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி டிங் லிரனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். அப்போது லிரன், உலகின் நெ.2 வீரராக இருந்தார்.

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் 4 சுற்றுகளின் முடிவில் அனிஷ் கிரி, 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, 3-வது இடத்திலும் மற்றொரு தமிழக வீரர் குகேஷ், 1.5 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளார்கள். குகேஷ், அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார்.

இதுவரை விளையாடிய 4 சுற்றுகளில் ஒரு வெற்றியும் மூன்று டிராக்களும் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. நாளை (வியாழன்) நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இப்போட்டியில் முதலிடத்தில் உள்ள அனிஷ் கிரியை அவர் எதிர்கொள்கிறார்.

ஜனவரி 13 அன்று தொடங்கிய டாடா ஸ்டீல் செஸ் போட்டி, ஜனவரி 28 வரை 13 சுற்றுகளாக நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in