ஜெயிஸ்வால், துபே அதிரடி: டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா

2 விக்கெட்டுகள் எடுத்த அக்‌ஷர் படேல், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
ஜெயிஸ்வால், கோலி (வலது)
ஜெயிஸ்வால், கோலி (வலது)ANI

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணிக்கு இன்னும் ஒரு சர்வதேச டி20 ஆட்டமே மீதமுள்ளது. இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதற்கான வேலைகளை ஜெயிஸ்வாலும் ஏன் ஷிவம் துபேவும் கூட முடித்துவிட்டார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

இந்தூரில் நடைபெற்ற 2-வது டி20யையும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஜெயிஸ்வால், ஷிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்தது இந்தியா.

இந்திய அணிக்கு கோலியும் ஜெயிஸ்வாலும் மீண்டும் திரும்பியதால் ஷுப்மன் கில்லும் திலக் வர்மாவும் வெளியே அமர்ந்தார்கள். ஆப்கானிஸ்தானில் ரஹ்மத்துக்குப் பதிலாக நூர் அஹமது இடம்பெற்றார். டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

குர்பாஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 14 ரன்களுக்கு ரவி பிஸ்னாய் பந்தில் ஆட்டமிழந்தார். குல்பதின் நயிப், பவர்பிளேயில் அதிரடியாக விளையாடினார். பிஸ்னாய் ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார். பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அமர்க்களமாக ஆடி வந்த குல்பதின், 57 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில், 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 15-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான். பிஸ்னாயின் கடைசி ஓவரில் ஸத்ரான் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். கடைசி ஓவர்களில் முஜீப், கரீன் ஜனத் சிறிய அளவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்கள். 19-வது ஓவரில் துபே 20 ரன்களைக் கொடுத்தார். ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. கடைசி 19 பந்துகளில் 41 ரன்கள் கிடைத்தன.

முதல் ஓவரில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். இது அவருடைய 150-வது டி20 ஆட்டம். நவம்பர் 2022-க்குப் பிறகு சர்வதேச டி20யில் விளையாடினார் கோலி. 3-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ஜெயிஸ்வால். பிறகு 5-வது ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 பவுண்டரிகள் அடித்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டிரைக் ரேட் - 181.25. பவர்பிளேயில் 69 ரன்கள் எடுத்தது இந்தியா. அதன்பிறகும் ஜெயிஸ்வால் அதிரடியாக விளையாடினார். வேகம் நிற்கவேயில்லை. அவருக்குப் போட்டியாக 10-வது ஓவரில் நபி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் ஷிவம் துபே. 6 சிக்ஸர்களுடன் 34 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஜெயிஸ்வால். கரிம் ஜனத்தின் ஓவரில் ஜிதேஷ் சர்மா டக் அவுட் ஆனார். பிறகு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. 2-0 என முன்னிலை பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது. 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஷிவம் துபே. 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த அக்‌ஷர் படேல், ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in