குல்தீப் 5 விக்கெட்டுகள்: முதல் நாளில் இங்கிலாந்தைக் கவிழ்த்த இந்தியா

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.
முதல் நாளில் இங்கிலாந்தைக் கவிழ்த்த இந்தியா
முதல் நாளில் இங்கிலாந்தைக் கவிழ்த்த இந்தியாANI

அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் முதல் நாளில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி. குல்தீப் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்துள்ளது. ஜெயிஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 52, கில் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா மீண்டும் விளையாட வந்தார். காயமடைந்த படிதாருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அஸ்வின், பேர்ஸ்டோவின் 100-வது டெஸ்டில் முதல் நாளில் பெருமை தேடிக்கொண்டவர் குல்தீப் யாதவ். பென் டக்கெட், ஆலி போப், ஸாக் கிராலி, பேர்ஸ்டோ என முதல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை நிலைகுலைய வைத்தார். இன்றும் வேகமாக ரன்கள் சேர்த்து வந்த கிராலியை அருமையான சுழற்பந்தில் 79 ரன்களுக்கு வீழ்த்தினார்.

கிராலி ஆட்டமிழந்தபிறகும் ரூட்டும் பேர்ஸ்டோவும் சிறிய கூட்டணியை அமைத்து அணியை 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் என்கிற ஓரளவு பாதுகாப்பான நிலைமைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் எப்போது ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினாரோ அதிலிருந்து மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. கடைசியில் 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து.

அஸ்வின் பின்வரிசை பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி உதவினார். ஸ்டோக்ஸை டக் அவுட் செய்து 5-வது விக்கெட்டை எடுத்தார் குல்தீப். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 19-வது நூற்றாண்டுக்குப் பிறகு குறைந்த பந்துகளில் (1871) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை அடைந்தார். 100-வது டெஸ்டில் சிறப்பு சேர்க்கும் விதமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

நம்பிக்கையுடன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஜெயிஸ்வால் மீண்டும் அரை சதமெடுத்தார். 9-வது டெஸ்டில் விளையாடும் இளம் வீரர் ஜெயிஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை இன்று கடந்தார். வேறு எந்த ஒரு இந்திய வீரரும் இவ்வளவு குறைவான டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியதில்லை.

ஜெயிஸ்வால் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரோஹித்துடன் இணைந்தார் கில். கேப்டன் ரோஹித் அரை சதமெடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் 52, கில் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் 83 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in