ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவளித்த சந்தோஷ் நாராயணன்
ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவளித்த சந்தோஷ் நாராயணன்@Music_Santhosh

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு நயா பைசா வரவில்லை: சந்தோஷ் நாராயணன்

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர் ரஹ்மான் மீது வந்த விமர்சனங்களுக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்தார்.
Published on

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர் ரஹ்மான் மீது வந்த விமர்சனங்களுக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்தார்.

மார்ச் 2021-ல் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மாஜா என்ற யூடியூப் சேனலில் வெளியானது. அறிவு எழுதிய இப்பாடலைப் பாடகர் ‘தீ’ பாடினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல் யூடியூபில் இதுவரை 48 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்து சந்தோஷ் நாராயணன் தனது X தளத்தில் பேசியதாவது:

“எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தது. எங்களிடம் இது தொடர்பாக அணுகும்போது இப்பாடலுக்கான 100 சதவீத உரிமை எங்களிடம்தான் இருக்கும் என்றனர். இதில் ஒரு சில புகழ்பெற்ற கலைஞர்களும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இதுவரை இந்த பாடல் மூலம் எங்களுக்கு எந்த வருமானமும் வரவில்லை. துரதிர்ஷ்டவசமாக, மாஜா நிறுவனத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் எதுவும் நடக்கவில்லை. மேலும், எனது யூடியூப் சேனலும் திருடப்பட்டது. இன்று வரை அதிலிருந்து வரும் வருமானத்தையும் மாஜா நிறுவனமே பெற்றுக் கொள்கிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து மாஜா நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ஏ.ஆர் ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாராயணன், “ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இந்த ஒட்டுமொத்த பிரச்னையிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். பல பொய்யான வாக்குறுதிகளால் அவரும் பாதிக்கப்பட்டார்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in