ரஞ்சி கோப்பை: இறுதிச்சுற்றில் இரு மஹாராஷ்டிர அணிகள்

மார்ச் 10 அன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பை - விதர்பா அணிகள் மோதுகின்றன.
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற விதர்பா அணி
இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற விதர்பா அணிANI

மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

விதர்பா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் மார்ச் 2 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் மத்தியப் பிரதேச அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விதர்பா அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். மத்தியப் பிரதேச அணியில் அசத்தலாகப் பந்துவீசிய அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மத்தியப் பிரதேச அணி ஹிமான்ஷூ மந்த்ரியின் அபார சதத்தால் 252 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான ஹிமான்ஷூ மந்த்ரி ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து வெளியேறினார். விதர்பா அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், யஷ் தாக்குர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 402 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக யஷ் ராதோட் 2 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் விளாசினார். இதன் மூலம் விதர்பா அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 321 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி 258 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான யஷ் துபே அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கெனவே மும்பை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதைத் தொடர்ந்து மஹாராஷ்டிர மாநிலத்திலிருந்து 2-வது அணியாக விதர்பா அணியும் தகுதி பெற்றுள்ளது.

மார்ச் 10 அன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மும்பை - விதர்பா அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பு 2017-18 மற்றும் 2018-19 ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையையும் வென்றது.

இந்நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடுகிறது. மும்பை, விதர்பா ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in