சாய் கிஷோரைப் பழிகூறும் பயிற்சியாளர்: தினேஷ் கார்த்திக் எதிர்ப்பு

ரஞ்சி கோப்பை அரையிறுதி தோல்விக்கு கேப்டனின் முடிவைக் காரணமாகக் கூறியுள்ளார் பயிற்சியாளர்...
சாய் கிஷோர்
சாய் கிஷோர்@saik_99

ரஞ்சி அரையிறுதி தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கைத் தேர்வு செய்ததுதான் காரணம் எனத் தமிழ்நாடு பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி கூறினார்.

தமிழ்நாடு - மும்பை இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2016-17 ரஞ்சி கோப்பையில் மும்பை அணியுடன் அரையிறுதியில் தோல்வி அடைந்த தமிழக அணி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெற்று மும்பை அணியுடன் மீண்டும் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் தோல்விக்குப் பிறகு தமிழக கேப்டன் சாய் கிஷோர் மீது பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரையிறுதியில் தோற்றது குறித்து பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி பேசியதாவது:

“நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். முதல் நாள் காலையில் 9 மணிக்கே நாங்கள் அரையிறுதியில் தோற்றுவிட்டோம். ஆட்டத்தின் முதல் நாளிலேயே எனக்கு முடிவு தெரிந்துவிட்டது. டாஸை வென்றவுடன் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த ஆடுகளம் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். ஆடுகளத்தைப் பார்த்தவுடன் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனச் சிந்தித்தேன். எனவே டாஸ் வென்றால் முதலில் பந்துவீச வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தேன். பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில், தமிழக அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. முதல் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தவுடன், அதிலிருந்து மீண்டு வருவது கடினம்” என்றார்.

பொதுவெளியில் கேப்டனை விமர்சித்ததற்கு, தமிழக அணியின் பயிற்சியாளருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல வீரர் தினேஷ் கார்த்திக். ட்விட்டரில் அவர்க் கூறியதாவது: “பயிற்சியாளரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற கேப்டனுக்கு ஆதரவளிக்காமல், இது அடுத்த நல்ல விஷயங்களுக்கான தொடக்கமாக எண்ணாமல், கேப்டனைச் சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளார் பயிற்சியாளர்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in