ரஞ்சி கோப்பை அரையிறுதி: தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வி

மும்பை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஷார்துல் தாக்குர்
ஷார்துல் தாக்குர்@imShard

தமிழ்நாடு - மும்பை இடையிலான ரஞ்சி அரையிறுதியில் மும்பை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழக அணியின் பேட்டர்கள் திணறினர். இதனால் முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர்.

மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷார்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோடியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோஹித் அவாஸ்தி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. கோட்டியன் 74, தேஷ்பாண்டே 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தாக்குர் 109 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தை விளாசினார்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று, தேஷ்பாண்டே 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். கோட்டியன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

232 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணியில் இந்திரஜித் தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. இந்திரஜித் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். 2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

விதர்பா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் அணி மும்பை அணியுடன் இறுதிச் சுற்றில் மோதும்.

2016 -17 ரஞ்சி கோப்பையில் மும்பை அணியுடன் அரையிறுதியில் தோல்வி அடைந்த தமிழக அணி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெற்று மும்பை அணியுடன் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in