பிரதமர் மோடி சென்னை வருகை: 5 அடுக்குப் பாதுகாப்பு முதல் போக்குவரத்து மாற்றம் வரை..

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி ANI

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உட்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையினர் எச்சரிக்ககை விடுத்துள்ளனர்.

அதே போல பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள ஒய்எம்சிஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"பிரதமர் மோடி ஒய்.எம்.சி.ஏ. நந்தனத்தில் நடைபெறும் ‘தாமரை மாநாடு’ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்லத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது."

பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும்.

* மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை

* இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு

* மவுண்ட் பூன்னமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.

* அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு

* விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)

* அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை

* தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in