திமுக கூட்டணி: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு

எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் தகவல்.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்@DMKITwing

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 4 அன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் திமுகவுடன் கடந்த திங்கள்கிழமை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் இன்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தொகுதி உடன்பாட்டுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் கூறியதாவது:

"நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைக் காட்டிலும் நாடு முக்கியம் என்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி எண்ணிக்கைகள் மட்டும் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் கலந்துபேசி முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள்" என்றார் முத்தரசன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:

"கடந்த தேர்தலில் இரு இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள சூழலில் கூடுதல் இடங்களைக் கேட்டிருந்தோம். ஏற்கெனவே பல கட்சிகள் உள்ள சூழலில், இன்னும் சில கட்சிகள் வரவிருக்கும் சூழலில் இருக்கிற எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில், இரு தொகுதிகளை ஒதுக்குவதாகத் தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் சார்பில் செயலாளர் என்கிற முறையில் நானும் கையெழுத்திட்டுள்ளோம். அடுத்த பல கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பதை பிறகு பேசி தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார் கே. பாலகிருஷ்ணன்.

திமுக கூட்டணியில் தற்போது வரையிலான தொகுதிப் பங்கீடு விவரம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 2

கொமதேக - 1

ஐயூஎம்எல் - 1

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in