அரசியல்வாதியால் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்: ஹனுமா விஹாரி

இனி ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என ஹனுமா விஹாரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரிANI

என்னுடைய சுயமரியாதையை இழந்த இடத்தில் இனி எப்போதும் விளையாட மாட்டேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் - ஆந்திரப் பிரதேசம் இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த ஆட்டம் முடிந்த பிறகு ஆந்திர அணியைச் சேர்ந்த ஹனுமா விஹாரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஆந்திர அணிக்காக இனி விளையாட மாட்டேன்” எனப் பதிவிட்டார்.

காலிறுதி ஆட்டத்திற்குப் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹனுமா விஹாரி கூறியதாவது:

“நாங்கள் கடைசி வரை போராடினோம், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இந்த பதிவு மூலம் ஒரு சில விஷயங்களை முன்வைக்கிறேன். நான் பெங்காலுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தில் நான் ஒரு வீரரை நோக்கிக் கத்தினேன். அந்த வீரரின் தந்தை ஓர் அரசியல்வாதி. அந்த வீரர் தனது தந்தையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். எனவே அந்த ஆட்டத்தில் வென்றிருந்தாலும் கூட, என்னை கேப்டன் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

நான் தனிப்பட்ட முறையில் அந்த வீரரை எதுவும் சொல்லவில்லை, இருந்தும் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஆந்திர அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்ற, இந்தியாவுக்காக 16 டெஸ்டில் விளையாடிய என்னை விட அவரே முக்கியமானவராக கிரிக்கெட் சங்கத்திற்குத் தெரிந்தார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தாலும், அணியின் மேல் உள்ள மரியாதைக்காகத் தொடர்ந்து விளையாடினேன். என்ன சொன்னாலும் அதனை வீரர்கள் கேட்க வேண்டும் என கிரிக்கெட் சங்கம் நினைக்கிறது. நீண்ட நாள்களாக இது குறித்து நான் பேசாமல் இருந்தேன். என்னுடைய சுயமரியாதையை இழந்ததால் இனி ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன். நான் எங்கள் அணியை விரும்புகிறேன், ஆனால் வீரர்கள் வளருவதை கிரிக்கெட் சங்கம் விரும்பவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in