பிரதமர் தொடங்கி வைத்த ரூ.41,000 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்கள்

ரூ.41,000 கோடி மதிப்பிலான 2000 ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
பிரதமர் தொடங்கி வைத்த ரூ.41,000 கோடி மதிப்பிலான ரயில் திட்டங்கள்

சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ’புதிய இந்தியா திட்டத்தின் பணி அடையாளம் இது’ என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

"தற்போது, முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியா வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறிய விருப்பங்களை விட்டுவிட்டு இன்றைய இந்தியா பெரிய கனவுகளைக் காண்பதற்கும், அந்தக் கனவுகளை விரைவில் நனவாக்குவதற்கும் முன்னேறியுள்ளது" என்றார். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"இன்று ரயில்வே தொடர்பான இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. பணிகள் தொடங்கிய அளவும் வேகமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது" என்றார்.

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள இந்த நிலையங்கள் ரூ.19,000 கோடிக்கும் அதிகமான செலவில் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் நகரின் இருபுறத்தையும் ஒருங்கிணைக்கும் 'நகர மையங்களாக' செயல்படும்.

நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திட்டங்களுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு ரயில்வேதுறையை மாற்றியமைக்க உறுதியளித்தார். மேலும், சுமார் 385 கோடி ரூபாய் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் கோமதி நகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

1500 சாலைப் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தச் சாலை மேம்பாலங்களும் சுரங்கப்பாதைகளும் 24 நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. இந்தத் திட்டங்களின் மொத்தச் செலவு சுமார் ரூ. 21,520 கோடி. இந்தத் திட்டங்கள் நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும் மற்றும் ரயில் பயணத்தின் திறனையும் செயல்திறனையும் மேம்படுத்தும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in