அமெலியா கெர் அசத்தல்: மும்பை அணிக்கு 2-வது வெற்றி

11 பந்துகள் மீதமிருந்த நிலையில் மும்பை அணி இலக்கை எட்டி, 2-வது வெற்றியை பெற்றது.
மும்பை அணிக்கு 2-வது வெற்றி
மும்பை அணிக்கு 2-வது வெற்றிANI

11 பந்துகள் மீதமிருந்த நிலையில் மும்பை அணி இலக்கை எட்டி, 2-வது வெற்றியை பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

குஜராத் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. வேதா கிருஷ்ணமூர்த்தி ரன் எடுக்காமலும், ஹர்லீன் தியோல் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டை இஸ்மாயில் வீழ்த்தினார். கேப்டன் மூனி ஒரு பக்கம் நிதானமாக விளையாட அவருடன் யாரும் நல்ல கூட்டணியை அமைக்கவில்லை. இதனால் 58 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது குஜராத் அணி. மூனி 2 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக கார்ட்னர் 15 ரன்களில் வெளியேற, கேத்ரின் பிரைஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார். அமெலியா கெர்ரின் அசத்தலான பந்துவீச்சில் குஜராத் அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக தனுஜா 4 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், இஸ்மாயில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது.

தொடக்கத்தில் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேற சிவர் பிரண்ட் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத வகையில் ரன்அவுட் ஆனார். இதன் பிறகு ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அமெலியா கெர் அருமையான கூட்டணியை அமைத்து ரன்களை வேகமாக உயர்த்தினர். அமெலியா கெர் 3 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த பூஜா வஸ்த்ராகர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்மன்பிரீத் கௌர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். ஹர்மன்பிரீத் கௌர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன், 41 பந்துகளில் 46 ரன்கள் எடுதார். இதனால் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் மும்பை அணி இலக்கை எட்டி, 2-வது வெற்றியை பெற்றது. 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in