ராஞ்சி டெஸ்ட்: தொடரை வென்றது இந்திய அணி

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றது இந்திய அணி.
தொடரை வென்றது இந்திய அணி
தொடரை வென்றது இந்திய அணி ANI

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் பிப். 23 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட், 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜுரெல் 90 ரன்கள் எடுத்து வெளியேறினார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோயிப் பஷிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் சுழற்பந்தைச் சமாளிக்க முடியாமல் திணறியது. கிராலி தவிர மற்ற யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. கிராலி 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்.

இதன் பிறகு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 24, ஜெயிஸ்வால் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜெயிஸவால் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்து ரூட் பந்தில் வெளியேற ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். கில் நிதானமாக விளையாட ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக படிதார் ரன் எடுக்காமலும், ஜடேஜா 4 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுகளையும் பஷீர் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்த தடுமாறியது இந்திய அணி.

இதன் பிறகு கில் மற்றும் ஜுரெல் அருமையான கூட்டணியை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்து அரைசதத்தை விளாசினார். கடைசி வரை முயற்சி செய்தும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கில் இரண்டு சிக்ஸர்களுடன் 52 ரன்களும், ஜுரெல் இரண்டு பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜுரெல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், தொடரையும் வென்றது இந்திய அணி. கடைசி டெஸ்ட் மார்ச் 7 அன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in