ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற தமிழக அணி

மும்பை - பரோடா இடையிலான காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் தமிழக அணியுடன் மோதும்.
ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை@tnca

கோவையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றது தமிழக அணி.

தமிழ்நாடு vs செளராஷ்டிரம் இடையிலான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தின் 2-வது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. முஹமது அலி 17, விஜய் சங்கர் 18 ரன்களிலும் வெளியேற, அஜித் ராம் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்றது தமிழக அணி.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய செளராஷ்டிர அணி 122 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக புஜாரா 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது தமிழக அணி. இந்த ஆட்டத்தில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் செளராஷ்டிர அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மும்பை - பரோடா இடையிலான காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் தமிழக அணியுடன் மோதும். இதில் மும்பை அணி வெற்றி பெற்றால் தமிழ்நாடு - மும்பை இடையிலான ஆட்டம் மும்பையில் நடைபெறும். பரோடா அணி வெற்றி பெற்றால் தமிழ்நாடு - பரோடா இடையிலான அரையிறுதி ஆட்டம் கோவையில் நடைபெறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in