கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 5 புறநகர் ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 5 புறநகர் ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் புறநகர்ப் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் செல்ல பயணிகள் சிரமப்படுவதாகத் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 5 புறநகர் ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையம் அருகில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. எனவே நாளை (பிப்.26) முதல் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த 5 ரயில்கள், இனி கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் புறநகர் ரயில்கள் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மேலும் இந்த கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்தடையும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 5 புதிய ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in