4-வது டெஸ்ட்: இந்திய அணி வெற்றிக்கு 152 ரன்கள் தேவை

இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு 152 ரன்கள் தேவைப்படுகிறது.
4-வது டெஸ்ட்
4-வது டெஸ்ட்ANI

இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு 152 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் பிப். 23 அன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட், 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. ஜுரெல் 30, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆரம்பம் முதல் பொறுப்புடன் விளையாடி வந்த ஜுரெல் ஒரு பக்கம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு பக்கத்தில் குல்தீப் யாதவ் 28 ரன்களிலும், ஆகாஷ் தீப் 9 ரன்களிலும் வெளியேறினர். முடிவில் ஜுரெல் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக சோயிப் பஷிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் சுழற்பந்தைச் சமாளிக்க முடியாமல் திணறியது. கிராலி தவிர மற்ற யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. கிராலி 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின். இதுவரை 35 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மூன்றாவது நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது. ரோஹித் சர்மா 24, ஜெயிஸ்வால் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in