முழு நேர அரசியல்வாதி யார்?: கமல் ஹாசன் கேள்வி

1 ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்குத் திரும்ப கிடைக்கிறது. ஒரு ஓட்டுக்கு ரூ. 5000 வாங்குவதால் நீங்கள் இழப்பது ரூ. 50 லட்சம்.
கமல் ஹாசன்
கமல் ஹாசன்@Makkal Needhi Maiam

மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். தொண்டர்களுக்கு மத்தியில் கமல் ஹாசன் பேசியதாவது:

“நான் கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை, சோகத்தில் வந்தேன். நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? அப்படி யாரும் இல்லை. என்னை இத்தனை ஆண்டுகளாக அனைத்து வசதிகளையும் கொடுத்து அன்பாகப் பார்த்துக்கொள்ளும் தொண்டர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் தான் படத்தில் நடிக்கிறேன். என்னுடைய சொந்த செலவில் அரசியலுக்கு வந்தேன்.

முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள் தான் கேள்வி கேட்கின்றனர். கோவையில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. இந்தியாவில் 40 சதவீத மக்கள் ஓட்டுப் போடுவதில்லை. நான் அரசியலுக்கு வருவது கஷ்டம் என்றனர், ஆனால் என்னை அவ்வளவு சீக்கிரம் அரசியலை விட்டு போகவைக்கவும் முடியாது. மக்களிடம் இருந்து பணம் திருட நான் வரவில்லை.

நான் செய்யும் அரசியல், வியாபாரம் இல்லை. என் அரசியல் பயணம் தனித்துவமானது. தில்லியில் விவாசாயிகளுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. 1 ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு திரும்ப கிடைக்கிறது. ஓட்டுக்கு ரூ. 5000 வாங்குவதால் நீங்கள் இழப்பது ரூ. 50 லட்சம்.

நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று இந்த ஏழு ஆண்டுகளில் கற்றுக்கொண்டோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது, அது குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in