காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: ராகுல் காந்தி கண்டனம்

காங்கிரஸ் என்பது பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல, மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி ANI

காங்கிரஸ் கட்சி தொடர்பான அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதாக நேற்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் கூறியதாவது:

“காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி வருமான வரித்துறையினர் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும் கட்சியின் வங்கி கணக்குகளை மீட்க ரூ. 210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகமே முடக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்துவதற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் கூட பணமில்லை” என்றார்.

மேலும், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, “சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்” என கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது X தளத்தில் கூறியதாவது:

“மோடி அவர்களே பயப்பட வேண்டாம், காங்கிரஸ் என்பது பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல, மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி. சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் கடைசி வரை போராடுவார்கள்” என்றார்..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in