டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்

சிறு பட்ஜெட் படங்களுக்கு 80-100 ரூபாய். மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120-150 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.
டிக்கெட் விலையை குறைக்க வேண்டும்: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்
ANI

ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கெட் கட்டணங்கள் குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கூறியதாவது:

“கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி, நம் இரு தரப்பினருக்கும் போதாது.

சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.

நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களை பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு.

சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இதை முன்னதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, கீழ்கண்ட மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

* சிறு பட்ஜெட் படங்களுக்கு 80-100 ரூபாய்

* மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120-150 ரூபாய்

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து டிக்கெட் கட்டணங்களை குறைத்து உள்ளார்கள் என்ற செய்தி ஊடங்களில் பரவும் போது, அது பொதுமக்களிடையே நல்ல ஒரு எண்ணத்தை உண்டாக்கும். அதன் மூலம், திரையரங்குகளுக்கு மக்கள் வரும் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட எங்களின் இந்த பரிந்துரையை ஏற்று ஒரு முடிவெடுத்து எங்களுக்கு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம். வரவிருக்கும் பொது தேர்தல் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மே மாதம் முதல் தான் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும், இந்த சூழ்நிலையில், நாம் டிக்கெட் கட்டணங்களை குறைத்துள்ளோம் என்ற நல்ல செய்தியை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி அவர்களை திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வைக்க வேண்டும். எங்களின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in