கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சௌரப் திவாரி

17 வருடங்களாக முதல்தர போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார் சௌரப் திவாரி.
சௌரப் திவாரி
சௌரப் திவாரி@iamstiwary

34 வயதான சௌரப் திவாரி தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிப்.15 அன்று தனது கடைசி ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடுகிறார்.

2006 முதல் ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் சௌரப் திவாரி, முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை 115 ஆட்டங்களில் 22 சதம், 34 அரைசதம் உட்பட 8030 ரன்களை குவித்துள்ளார். 88 ஆட்டங்களில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மேலும் இவர் ஜார்க்கண்ட் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தில்லி டேர் டெவில்ஸ், புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற 4 அணிகளில் விளையாடிய இவர் 93 ஆட்டங்களில் 1494 ரன்களை அடித்தார். 2010-ல் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். மேலும் 2008-ல் யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் சௌரப் திவாரி இடம்பெற்றிருந்தார்.

தன்னுடைய ஓய்வு குறித்து சௌரப் திவாரி பேசியதாவது: “இந்த பயணம் முடிவடைவதை நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது. இந்த முடிவை எடுக்க இது சரியான நேரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், தேசிய அணியில் அல்லது ஐபிஎல்-ல் நீங்கள் இடம்பெறவில்லை என்றால், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். என்னுடைய ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே நான் இந்த முடிவை எடுக்கவில்லை. ரஞ்சி கோப்பையில் என் சாதனையை எடுத்துப் பாருங்கள். ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தது என்ன? என்ற கேள்வியை அதிகம் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்தது கிரிக்கெட் மட்டுமே, அதனால் கிரிக்கெட் தொடர்பான ஏதோ ஒன்றில் இயங்கிக் கொண்டிருப்பேன். ஒரு அரசியல் அழைப்பும் வந்தது, ஆனால் அது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in