மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கடந்த 28 நாட்களில் 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி ANI

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி அவர்களுக்கு இன்று (9-2-2024) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

“இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பல தலைமுறைகளாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கடந்த 28 நாட்களில் 6 சம்பவங்களில், 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுத்தும் சேதங்கள் கவலையை மேலும் அதிகரிக்கிறது. பல மீனவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு, தங்களது வர்த்தகத்திற்கு இன்றியமையாத படகுகளை வாங்குவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் முதலீடு செய்துள்ளதையும், முறையான இழப்பீடு அல்லது மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், படகுகள் இதுபோன்று நாட்டுடையாக்கப்படுவது, மீனவர்களையும், அவர்களது குடும்பங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெறவும், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in