சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூடுதல் ஆணையர் விளக்கம்

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அந்த தகவல் புரளி தான் என சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அந்த தகவல் புரளி தான் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

சென்னையில் அண்ணா நகர், கோபாலபுரம், பாரிமுனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மர்ம நபர்களால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இந்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் உடனடியாக அழைத்துச் செல்லவேண்டும் எனப் பள்ளிகள் அறிவிப்பை வெளியிட்டன. இதனால் பெற்றோர்கள் உடனடியாகப் பள்ளிகளுக்கு விரைந்தார்கள். இதன்முடிவில் மின்னஞ்சல் மிரட்டல் ஒரு புரளி தான் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேசியதாவது: “இது புரளி என தெரிந்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால், குற்றவாளியை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியாது. ஆனால் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். பொது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். 13 பள்ளிகளுக்கு இது போன்ற மின்னஞ்சல் வந்துள்ளது. பெரும்பாலான இடத்தில் சோதனைகளுக்குப் பிறகு, பள்ளிகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மின்னஞ்சல் ஐடி மூலமாக தனித்தனியாக செய்தி அனுப்பப்பட்டுள்ளது. யார் இந்த செய்தியை அனுப்பியது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பள்ளிகளில் தேர்வுகள் காரணத்தால் இந்த மிரட்டல் வந்ததாக தெரியவில்லை. மின்னஞ்சல் அனுப்பியவரிடம் இருந்து வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. யார் இந்த செய்தியை அனுப்பியது என்பதை கண்டுப்பிடித்து அவருக்கு தக்க தண்டனையை வழங்குவதே இதனைத் தடுக்க ஒரே வழி” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in