பாஜக அரசு நிதித் தடைகளை ஏற்படுத்துகிறது: பினராயி விஜயன்

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்...
பினராயி விஜயன்
பினராயி விஜயன்@pinarayivijayan

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில அரசுகளுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.

மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியைச் சரிவர ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

இப்போராட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:

“ஜிஎஸ்டி இழப்பீட்டால் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே சென்றது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு நிதித் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. நிதி கூட்டாட்சி முறையைச் சிதைக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது. மேலும் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மீறி பாஜக அரசு செயல்படுகிறது. மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், கடன் வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு. செஸ் வரிகள் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது, அதிலிருந்து மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்குவதில்லை. இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

இப்போராட்டம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

“தமிழ்நாட்டில் எங்களுக்கு எதிராக இருந்த ஜெயலலிதாவும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில உரிமைக்காகவும் போராடி உள்ளார். முதலமைச்சராக இருந்தபோது கூட்டாட்சித் தத்துவத்தின் சாம்பியனாக இருந்தார் மோடி” என்றார்.

மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “நான் பேச வேண்டியதைப் பேசி விட்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். எனவே அவர் சார்பாக நான் இந்த போராட்டத்தில் பங்கேற்று கேரளா, தில்லி, பஞ்சாப் முதல்வர்களிடம் கருத்துகளைத் தெரிவித்தேன். அநீதி அதிகரிக்க அதிகரிக்கப் போராட்டங்களும் அதிகரிக்கும். அதுதான் இயற்கை” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in