399 ரன்கள் இலக்கு: 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 67/1

399 ரன்கள் இலக்கைக் கொண்டு விளையாடும் இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு@icc

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 9 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 332 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் பரபரப்பான 4-வது நாளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 2-வது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஜெயிஸ்வால் 17 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களிலும் வெளியேற கில் நிதானமாக விளையாடி தனது 3-வது சதத்தைப் பதிவுசெய்தார். 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கில் வெளியேற அடுத்து வந்த அக்‌ஷர் படேல் தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. அக்‌ஷர் படேல் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரேஹன் அகமது மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராலி 29 ரன்களுடனும், ரேஹன் அகமது 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பென் டக்கெட் 28 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி வெற்றி பெற மேலும் 332 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் 4-வது நாள் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in