மயங்க் அகர்வாலால் அடுத்த 48 மணி நேரத்துக்குப் பேச முடியாது: கர்நாடக அணி

பிப்.9 அன்று நடைபெறவுள்ள தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால் ANI

மயங்க் அகர்வாலால் அடுத்த 48 மணி நேரத்துக்குப் பேச முடியாது என கர்நாடக அணியின் மேலாளர் ரமேஷ் கூறினார்.

ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகர்தலாவில் இருந்து தில்லி வழியாகச் சூரத்திற்குப் பயணம் செய்தபோது மயங்க் அகர்வாலுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அகர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வரும் வெள்ளியன்று தொடங்கும் ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அகர்வால் விளையாட மாட்டார் எனத் கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் நலம். மீண்டும் விளையாடத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். உங்களின் அன்புக்கும், வேண்டுதலுக்கும் நன்றி” எனக் கூறினார் மயங்க் அகர்வால்.

இந்நிலையில் விமானத்தில் மயங்க் அகர்வாலுக்கு என்ன நடந்தது என்பது குறித்து கர்நாடக ரஞ்சி அணியின் மேலாளர் ரமேஷ் பேசியதாவது:

“நாங்கள் விமானத்தில் புறப்படத் தயாரானோம். அப்போது அகர்வாலுக்குத் தாகம் ஏற்பட்டதால் தன்னுடைய இருக்கைக்கு முன் இருந்த பாட்டில் தண்ணீரைக் எடுத்துக் குடித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தத் தண்ணீரைத் துப்பிய பின்பும் எரிச்சல் குறையவில்லை என்பதை அவர் உணர்ந்தார். இதன் பிறகு விமானப் பணிப்பெண்ணிடம் நடந்ததைப் பற்றிக் கூறியவுடன், விமானத்தில் உதவி செய்ய மருத்துவர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரித்தனர். ஆனால், விமானத்தில் உதவி செய்ய மருத்துவர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அகர்வால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருடைய உதட்டில் வீக்கமும் காயமும் இருப்பதால், அவர் இன்னும் 48 மணி நேரத்திற்குப் பேச முடியாது” என்றார்.

இந்தச் சூழலில் அடுத்த ஆட்டத்தில் மயங்க் அகர்வால் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பிப். 9 அன்று நடைபெறவுள்ள தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in