ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாத்ரித் நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின் ANI
2 min read

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investores First Port Of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து பேசினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

“ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாத்ரித் நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக் நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.

எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.

கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது. அழகான நிலப்பரப்பும், துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் நாடு விளங்குகிறது.

பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே, வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு 'ஃபார்ச்சூன் 500' நிறுவனங்கள் மற்றும் 20 'ஃபார்ச்சூன் 2000' நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in