ரஞ்சி கோப்பை: தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி

ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை@tnca

ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் கடந்த 19 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 489 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் 4 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 402 பந்துகளில் 245 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். ரயில்வேஸ் அணி 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

இதன் பிறகு விளையாடிய ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்ற ரயில்வேஸ் அணி மீண்டும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தமிழக அணி இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாய் கிஷோர் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இரட்டைச் சதம் அடித்த ஜெகதீசன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in