பில்கிஸ் பானு வழக்கு: நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளிகள் மீண்டும் சரண்!

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 நபர்களும் சரணடைந்துள்ளனர்.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு ANI

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஐந்து மாதக் கர்ப்பிணியான 21 வயது பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானார். மேலும் அவருடைய மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் கொலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரையும் 2022 ஆகஸ்ட் 15 அன்று, குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது.

15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாலும் நன்னடத்தை காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டதாக குஜராத் அரசு விளக்கம் அளித்தது. இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிலர், பொதுநல மனுத்தாக்கலும் செய்தார்கள். இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையைக் குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. வழக்கு, மஹாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11 பேரையும் விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் விடுதலையான 11 பேரும் இரு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளில் 5 பேர் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், அவர்களிடம் விசாரணை நடத்தி தீர்ப்பளித்தது. அதன்படி, நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி குற்றவாளிகள் குறிப்பிட்டிருந்த காரணங்கள் தகுதியற்றது என குறிப்பிட்டிருந்த நீதிபதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன. 21) சரணடையுமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 நபர்களும் சரணடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in