வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில்: விரைவில் சோதனை ஓட்டம்

ஒருவழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரைவில் முடிவடையவுள்ளன.
பறக்கும் ரயில்
பறக்கும் ரயில் ANI

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் சோதனை ஓட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ரயில் போக்குவரத்துச் சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாகக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாள்களாகப் பணிகள் நடைபெற்று வந்த வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் ரயில் திட்டம் 1985-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 1997-ல் சென்னைக் கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை 9 கிலோமீட்டருக்கு அமைக்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி வழித்தடம் 2007-ல் முடிக்கப்பட்டது. 3-ம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு பெரும்பாலான பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்குப் பிறகு சில வாரங்களில் மயிலாப்பூர் - பரங்கிமலை வழித்தடத்தில் பறக்கும் ரயில் செல்வதைக் காணமுடியும். இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பரங்கிமலை, பழவந்தாங்கல் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த வழித்தடத்தில் குறைந்த நேரத்தில் மயிலாப்பூருக்கும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கும் செல்ல முடியும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in