இரு சூப்பர் ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா

டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்தியா.
இரு சூப்பர் ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ANI

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இரு முறை சூப்பர் ஓவர்கள் நடந்ததைத் தொடர்ந்து ஒருவழியாக முடிவு கிடைத்தது. இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது டி20 ஆட்டம் பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மாவுக்குப் பதிலாக சாம்சன், குல்தீப் யாதவ், அவேஷ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். ஆப்கானிஸ்தான் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஜெயிஸ்வால் 4 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கோலியும் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன் பிறகு துபே 1 ரன்னிலும், சாம்சன் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற 4.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ஃபரீத் அஹமத் அருமையாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு பக்கம் வேகமாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு பக்கத்தில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா தனது 5-வது டி20 சதத்தை விளாசினார். இதன் மூலம் டி20-யில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித் சர்மா.

முதல் இரு ஆட்டங்களில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறிய இவர் இந்த ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். இக்கூட்டணியைக் கடைசி வரைப் பிரிக்க முடியாமல் தவித்தது ஆப்கானிஸ்தான் அணி. ரிங்கு சிங் தனது 2-வது அரை சதத்தை அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அசத்தினார். ரிங்கு சிங் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன், 39 பந்துகளில் 69 ரன்கள் அடித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 190 ரன்கள் சேர்த்த இக்கூட்டணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 103 ரன்களைக் குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் நல்ல கூட்டணியை அமைத்தனர். 93 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். குர்பாஸ் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேற ஸத்ரானும் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஓமர்ஸாய் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற குல்புதின் நைப் மற்றும் நபி நல்ல கூட்டணியை அமைத்தனர். நபி 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த கரீம் ஜனத் 2 ரன்னிலும், நஜிபுல்லா ஜத்ரான் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் குல்புதின் நைப் தனியாக அணியின் வெற்றிக்குப் போராடினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நைப் அபாராமாக விளையாடி அணியின் ஸ்கோரை சமன் செய்தார். இதனால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. நைப் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியும் 16 ரன்கள் அடிக்க மீண்டும் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. இம்முறை முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. 12 ரன்களை நோக்கி விளையாட வந்தது ஆப்கானிஸ்தான் அணி. ரவி பிஸ்னாய் வீசிய அந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இரு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றதால் இந்த ஆட்டம் பெங்களூர் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in