எனக்கு என்ன குறை?: உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முதல்வர் பதில்

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?.
விழாவில் முதல்வர் ஸ்டாலின்
விழாவில் முதல்வர் ஸ்டாலின்@TNDIPRNEWS

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற "அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

இவ்விழாவில் முதல்வர் பேசியதாவது:

“எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை?.

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்கள்.“கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக ஆறாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து! எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன்!

மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள்.

உக்ரைன், சூடான், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் என்று பல்வேறு நாடுகளில் இருக்கின்ற நம்முடைய தமிழர்கள் அங்கு எதிர்பாராத விதமாக பிரச்சினைகளை சந்திக்கின்றபோது, தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது

வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பை தமிழ்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி இவர்கள் முதலீடுகள் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்!

தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து விடைபெறுகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in