மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா?

இந்தப் படங்கள் எல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் இதன் தலையெழுத்தே மாறியிருக்குமா?
மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா?

மலையாளிகளுக்குள் பேசி வைத்துக்கொள்ளாத ஓர் ஒப்பந்தம் உள்ளது.

அவர்கள் பேட்டையிலிருந்து ஓரளவு நல்ல படம் ஒன்று வந்துவிட்டால் போதும். அத்திப்பட்டி கடலில் அறுநூத்தி தொன்னூற்று சொச்சம் பேரும் சேர்ந்து மூச்சுக் கொடுத்து அஜித்தைக் கரையேற்றியதைப் போல அந்த ஓரளவு நல்ல மலையாளப் படத்தைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பேசிப் பேசி, கொண்டாடி, கவனம் ஈர்த்து, படத்தைப் பெரிதாக்கி விடுவார்கள். நாமும் அந்த ஜோதியில் கலந்து அவர்கள் முன்னிறுத்திய படங்களைப் பார்த்து, நம் பங்குக்கு அதைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்ப்போம். த்ரிஷ்யத்தின் புகழ் பரவியதில் நமக்கும் பங்குண்டு தானே!

சமீபத்தில் வெளிவந்த காதல் - The core படத்தையும்தான் சிலாகித்தோம். நல்ல படம்தான். கதையில் ஆழம் கொண்ட, காட்சிகளில் அழுத்தம் கொண்ட படம்தான். அதிலும் அந்த வானவில் காதல், ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் நிகழ்வதாக காண்பிக்கும் தைரியம்... இவையெல்லாம் கேரளாவில், மலையாளப் படங்களில்தான் சாத்தியம்.

பத்மினி, திரிசங்கு, ரோமாஞ்சம், இரட்ட, சேஷம் மைக்கில் பாத்திமா, 2018 எனச் சமீபத்தில் நானும் சமூகவலைத்தளங்கள் புகழ்ந்த பல மலையாளப் படங்களைப் பார்த்துத் தள்ளியிருக்கிறேன், நண்பர்களிடம் பாராட்டிப் பேசியிருக்கிறேன்.

என்ன ஒன்று, அவ்விட நாட்டில் எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு சுலபமாக ஆரம்பிக்காது. நன்றி அட்டைகள் போய்க்கொண்டே இருக்கும். (இதற்கு ஓர் இயக்குநர் சொன்ன பதில் - வருங்காலத்தில் படம் பார்க்கும்போது யாரெல்லாம் நமக்கு உதவியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்ட உதவுமாம்). பிறகு பொறுமையாகப் படத்தைத் தொடங்கி, "நிஜமாவே படம் எப்ப போடுவீங்க பாஸ்?" என்று கேட்கும் அளவுக்கு படம் 'மெ....துவாகத்தான்....' போய்க்கொண்டு இருக்கும். எனவே பாராட்டுகள் பெறும் மலையாளப் படங்கள் எல்லாம் குறையே சொல்ல முடியாதவை என்பது இல்லை. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் பார்க்கத் தொடங்கிய சில மலையாளப் படங்களை, பார்த்து முடித்தபிறகு அவை அதீதமாகப் புகழப்பட்டதாகவும் உணர்ந்ததுண்டு.

ஏற்கெனவே சொன்னதுபோல மலையாளப் படம் எது வந்தாலும் அதை மிகவும் பாராட்டிப் பாராட்டி நம்மையும் பார்க்கத் தூண்டிவிடுகிறார்கள். கடந்த சில வாரங்களில் வெளிவந்த ப்ரேமலு, மஞ்சும்மெள் பாய்ஸ் படங்கள் எப்போது ஓடிடியில் வரும் என ஏற்கெனவே நினைக்க வைத்து விட்டார்கள்.

இது ஒன்றும் மலையாளப் படங்களுக்கு எதிரான கட்டுரை அல்ல. நன்றாகப் படம் எடுத்தால் நம்மை விட வேறு யாரால் பாராட்ட முடியும்? ஆனால் அதே அளவு நல்ல படங்கள் தமிழிலும் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் அப்படங்களைச் சிலாகிப்பதோ, ஓடிடியில் பார்த்துப் பாராட்டுவதோ ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். நம்மால் மலையாளிகள் போல நல்ல படங்களின் புகழைப் பெரிதாகப் பரப்ப முடியவில்லையே, ஏன்?

*

கலைஞர் டிவியில் வா தமிழா வா என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்கும் ஒன்று தோன்றியது.

2023-ன் சிறந்த படங்கள் குறித்த நிகழ்ச்சி அது. கொன்றால் பாவம், எறும்பு, கிடா, ஆயிரம் பொற்காசுகள், எறும்பு போன்ற படங்களை இயக்குநர்களும் ரசிகர்களும் பாராட்டிப் பேசினார்கள். எனக்குப் பக்கென்று இருந்தது. மலையாள, கொரியப் படங்களை எல்லாம் தேடித்தேடிப் பார்க்கிறோம். தமிழிலேயே இத்தனை நல்ல படங்கள் வந்ததா?

'எறும்பு' பட விளம்பரங்கள் ஆங்காங்கே கண்ணில் பட்டிருக்கின்றன. சூப்பர் சிங்கர் புண்ணியத்தில் 'கொன்றால் பாவம்' படம் குறித்து அறிந்திருந்தேன்.

நிகழ்ச்சியில் சொன்ன அத்தனை நல்ல படங்களையும் பார்த்து முடித்தேன். மூன்றுமே தலா ஒன்றே முக்கால் மணி நேரப்படங்கள் தாம். மூன்றையும் பார்த்து முடித்த பிறகு ஒருவிதக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது என்னவோ நிஜம் தான். எப்படி இந்தப் படங்களைத் தவறவிட்டேன்? இந்தப் படங்களைப் பற்றி பேச ஏன் யாருமே இல்லை?

கொன்றால் பாவம். ஒரே வீட்டுக்குள், ஒரே இரவில் நடக்கும் படம். படத்தில் எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள். 'அசுணமா’ என்ற பறவையின் கதையைச் சொல்லி ஆரம்பிக்கும் படம், அப்படியே உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. என்னமோ நடக்கப்போகிறது என்ற பதைபதைப்போடு அப்படியே என்னைக் கட்டிப்போட்டது. எதிர்பாராத முடிவு. படம் பார்த்து ஓரிரு தினங்கள் கடந்த பின்பும் அப்படம் பற்றிய நினைவு வந்து கொண்டே இருந்தது.

ஆயிரம் பொற்காசுகள். சும்மா சாப்பிட்டு, தூங்கி சரக்கடித்து, எனக்கென்ன என்று வாழ்ந்துகொண்டிருக்கும் இருவருக்கும் ஒரு புதையல் கிடைக்கிறது. இதுதான் கதையின் ஆரம்பம். சரவணன், விதார்த், ஜார்ஜ் மரியான் என்று கலக்கல் கூட்டணி. நகைச்சுவைப் படமே வருவதில்லை, ஒரே கத்தியும் துப்பாக்கியுமாக வன்முறை தெறிக்கும் படங்கள்தான் இப்போதெல்லாம் வருகின்றன என்று அங்கலாய்க்க வேண்டியது. ஆனால் இதற்கு மாற்றாக ஒரு படம் வந்தால் அது வந்த சுவடே தெரியாமல் காணாமல் போகும் அளவுக்கு அதை அம்போ என விட்டுவிட வேண்டியது.

இந்த விதார்த் தான் எவ்வளவு இயல்பாக நடிக்கிறார்! (இறுகப்பற்று , குய்கோ...) அவர் நம் ஊரின் 'நேச்சுரல் ஸ்டார்'. கார்பன் (2022) படத்திலும் விதார்த் தான். ஒருவர் கனவில் கண்டது நிஜத்தில் அப்படியே நடக்கிறது என்பதுதான் கதை. படத்தில் ஒரு வசனம் - "அம்மா இடத்தை நிரப்ப மனைவி வந்துருவா. ஆனா அப்பா இடத்தை நிரப்ப சாமி தான் வரணும்". காதல் - The Core படத்தில் ஒரு காட்சியில் மேத்யூவும் அவருடைய அப்பாவும் நெகிழ்ந்து அழுவார்கள். அந்தக் காட்சிக்கு ஹார்டின் விட்ட நாம், கார்பன் பட அப்பா - பையன் காட்சிகளுக்கு ஒரு காத்தாடியேனும் விட்டிருக்க வேண்டாமா?

எறும்பு - அருமையான படம் (அமேஸான் பிரைம் ஓடிடி). குழந்தை. குட்டியோடு குடும்பம் சகிதமாகப் பார்த்து நெகிழலாம். அம்மா இல்லாத ஒரு அக்காவும் தம்பியும், ஒரு மோதிரத்தைத் தொலைத்து விடுவார்கள். அப்பாவின் 2-வது மனைவிக்குப் பயந்து வேறு மோதிரம் வாங்கி வைத்து விடலாம் என்று காசு சேர்ப்பார்கள். அப்பாவாக சார்லி. படம் முழுக்க ஜார்ஜ் மரியான், மனப்பிறழ்வு கொண்டவராக ஓர் உடைந்த, வேலை செய்யாத செல்போனில் யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பார். அம்மா இல்லாத சிறுமி ஒரு காட்சியில் உடைந்து அழுவாள். ஜார்ஜ் மரியான் அவளிடம் "அழுவாத, இந்தா செல்போன், உங்க அம்மா கிட்ட பேசு" என்று கொடுப்பார். அந்த சிறுமியும் போனில் "அம்மா .. " என்று பெருங்குரலெடுத்து அழுவாள். அப்போது ஜார்ஜ் ஒரு பார்வை பார்ப்பார். ப்பா... தமிழ்ப் படங்களில் இதுபோன்ற பொக்கிஷக் காட்சிகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

ஒருவேளை, எனக்குதான் இப்படங்கள் பற்றி தெரியாமல் போய்விட்டதோ என்று சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். நானே பரவாயில்லை போல.

’கொன்றால் பாவம்’ "இப்படி ஒரு படமா? அடுத்து என்ன, தின்றால் போச்சுவா?”

’ஆயிரம் பொற்காசுகள்’ "ஓ ஸாரி... கேள்விப்படவே இல்லை. அது மலையாளப் படமா?”

’எறும்பு.’ என்று ஆரம்பித்தாலே "ஓ.. அனிமேஷனா?" என்று திருப்பிக் கேட்பார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் தீவிர சினிமா ரசிகர்கள். தேடித்தேடிப் படம் பார்ப்பவர்கள். நல்ல படங்களைப் பரிந்துரைப்பவர்கள். அவர்களிடமே இந்த தமிழ்ப் படங்கள் போய்ச்சேரவில்லை. ஆனால் நான் மேலே சொன்ன எல்லா மலையாளப் படங்களையும் பார்த்திருக்கிறார்கள். எங்குத் தவறு நடக்கிறது? (எறும்பு, கிடா, கொன்றால் பாவம் படங்கள் அமேஸான் பிரைம் ஓடிடியில் உள்ளன. ஆயிரம் பொற்காசுகள், கார்பன் படங்கள் எந்த ஓடிடியிலும் இல்லை. ஆனால் யூடியூபில் உள்ளன.)

நமக்கு நல்ல படம் எடுக்கத் தெரியாமல் இல்லை. அதை மக்களிடம் முறையாகக் கொண்டு செல்லத் தெரியவில்லை. அதைப் பற்றிய செய்தியை, பிம்பத்தை உருவாக்க முடிவதில்லை.

*

தங்கள் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்வதும், ஒற்றுமையாக இயங்குவதும் மலையாளிகளின் மரபணுவிலேயே இருக்கிறது என நினைக்கிறேன்.

பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

நான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு பிசாத்துப் போட்டி. போட்டியாளர்கள் அவரவர் கட்டுரையை நிறுவன இணையத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு எல்லா ஊழியர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு பிடித்த கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்றவருக்கு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

தெரிந்த ஒரு மேலாளர், தமிழர், அவரும் அந்தப் போட்டியில் இருந்தார். என் குழுவில் இருந்த ஒரு மலையாளி, அந்த மேலாளரிடம், "உங்களை ஜெயிக்க வைப்பது என் பொறுப்பு" என்றார். வாட்சப்பைத் திறந்தார். படபடவென்று தட்டினார். நம்ப மாட்டீர்கள். யாரென்றே தெரியாத, ஏதேதோ குழுக்களிடம் இருந்து சேட்டன்களும் சேச்சிகளும் எங்கள் மேலாளருக்கு வாக்குகளை அள்ளி வீச, பிறகு அப்போட்டியில் யார் வெற்றி பெற்றார் என்று நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மலையாளிகள் ஒருவர் மீது ஒருவர் கேள்வி கேட்காத நம்பிக்கை கொண்டவர்களாகவும் என் ஆள் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்களாகவும் இருக்கிறார்கள். கார்ப்பரேட் உலகில் ’advertise yourself' என்று சொல்வார்கள். அவர்கள் ’advertise and support your fellows’ என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

*

சரி, நான் சொன்ன தமிழ்ப் படங்களை ஊடகங்களாவது பெரிதாகப் பேசியதா என்று பார்த்தால் அது இன்னொரு சோகக் கதை.

நம் ஊரில், பெரிய விமர்சகராக இருக்கிறேன் பேர்வழி என்று நல்ல படங்களில் உள்ள சின்னச் சின்ன குறைகளை ஊதிப் பெரிதாக்கி, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் எறும்பு படத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் கொடுத்து "மிக மெதுவாக இருக்கிறது" என்று விமர்சனம். ஒருவேளை, இந்தப் படங்கள் எல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் இதன் தலையெழுத்தே மாறியிருக்குமா?

கொன்றால் பாவம் கன்னடத்தில் விருது வாங்கிய படத்தின் ரீமேக். இயக்குனர் தமிழர். தமிழிலும் அவரே இயக்கியிருக்கிறார். படம் பற்றி வா தமிழா வா நிகழ்ச்சியில் பேசும்போதே "என் தாய்மொழி தமிழில் முதல் படம் எடுக்கிறேன் என்று சற்று அதிகப்படியாக திருத்தங்கள் செய்யப் போய், சில இடங்கள் அசல் கன்னடப் படம் அளவுக்கு வரவில்லை" என்று ஒப்புக்கொண்டார். அதற்கு கரு. பழனியப்பன் "குழந்தை அழகா இருக்கே என்று சில நேரம் கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுவோம், ஆனா குழந்தைக்கு கன்னம் சிவந்து போய் வலிச்சுடும்" என்றார்.

கன்னடர்கள் இயல்பில் கூச்ச சுபாவிகள். பெரிதாகப் பெருமை அடித்துக்கொள்ளத் தெரியாதவர்கள். லூசியா, யூ டர்ன், தியா, கேஜிஎஃப், காந்தாரா, சப்த சாஹரதாச்சே எள்ளோ என்று சில படங்களைத் தவிர மற்ற படங்களை அவர்களால் எல்லை தாண்டிக் கொண்டு செல்ல முடியவில்லை.

தெலுங்கில் பலகாம், ஹிந்தியில் கட்ஹல் போன்ற சிறிய படங்கள் வந்தது குறித்து தெரிந்து, அவற்றையும் பார்த்தேன். சமீபத்திய பேட்டிகளில் பூவரசம் பீப்பீ, நரை எழுதும் சுயசரிதம் படங்கள் பற்றி நடிகர் மணிகண்டன் பேசியிருக்கிறார். இனிமேல் தான் நான் அவற்றைப் பார்க்கவேண்டும்.

நான் குறிப்பிடும் தமிழ்ப் படங்களுக்கு யூடியூபிலும் பார்வைகள் குறைவுதான்.

மலையாளிகள் போல நல்ல படங்களைக் கைத்தூக்கி விடுவது நம் கடமை. நம் கண்முன்னே மலையாளிகள் தவறாமல் செய்யும் ஒரு காரியத்தை நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அன்பே சிவம், உத்தம வில்லன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற காலம் கடந்த பாராட்டுகள், படம் வெளியாகும்போது நிகழும் சேதாரத்தைச் சரிசெய்துவிடாது.

- ப்ரியா கதிரவன்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in