பால்கே விருது, பால்கே சர்வதேச விருது: இரண்டும் ஒன்றா?

கமல் ஹாசன், இளையராஜாவுக்கே வழங்கப்படாத ஒரு விருது இவர்களுக்கு எப்படி வழங்க முடியும்?
ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான பால்கே சர்வதேச விருதை வென்ற நயன்தாரா
ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான பால்கே சர்வதேச விருதை வென்ற நயன்தாரா

ஷாருக் கான், நயன்தாரா, அனிருத், அனிமல் பட இயக்குநர் சந்தீப் வாங்காவுக்கு தாதாசாகேப் பால்கே விருதுகள்.

இந்தச் செய்தி இன்று வெளியானபோது பலரும் குழம்பிப் போனார்கள். அதெப்படி இன்னும் கமல் ஹாசன், இளையராஜாவுக்கே வழங்கப்படாத ஒரு விருது இவர்களுக்கு வழங்க முடியும்? இது எப்படிச் சாத்தியம் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள்.

கடந்த வருடம் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டபோதும் இதே கேள்விகளும் குழ்பபங்களும் எழுந்தன.

உண்மை என்னவென்றால் மக்கள் உயர்வாக நினைக்கும் பால்கே விருது வேறு, இந்த விருது வேறு.

அப்படியா?

ஆம். ஒவ்வொன்றாக இதைப் பார்க்கலாம்.

தாதேசாகேப் பால்கே விருது என்றால் என்ன?

1913-ல் இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை இயக்கியவர் பால்கே. இந்தியத் திரைப்படத் தந்தை எனப் போற்றப்படுபவர். எனவே திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு, பால்கே பெயரில் 1969 முதல் விருது ஒன்று மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கடைசியாக 2021-ல் வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. 2019-ல் ரஜினிக்கும் 2018-ல் அமிதாப் பச்சனுக்கும் 1996-ல் சிவாஜிக்கும் 2010-ல் கே. பாலசந்தருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. சத்யஜித் ரே உள்பட இதுவரை 53 கலைஞர்களுக்கு இவ்விருதை அளித்து கெளரவப்படுத்தியுள்ளது மத்திய அரசு. திரைப்படத் துறையின் உயரிய விருது இதுவே.

தாதேசாகேப் பால்கே சர்வதேச விருது என்றால் என்ன?

முன்னது, அரசால் வழங்கப்படுவது. இந்த விருதை தனியார் அமைப்பு வழங்குகிறது. 2012-ல் தாதாசேகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா (DPIFF) தொடங்கப்பட்டு, 2016-ல் இருந்து நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஒரே சுயாதீன சர்வதேச திரைப்பட விழா இதுதான், இந்தியத் திரைப்படங்களில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்துபவர்களுக்கு உரிய கெளரவம் அளிப்பதற்காக இத்திரைப்பட விழாவில் திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் அளிக்கப்படுவதாக DPIFF இணையத்தளம் குறிப்பிடுகிறது. தொழிலதிபர் அனில் மிஸ்ரா, இந்த விருதின் நிறுவனராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ளார்.

மத்திய அரசின் பால்கே விருது ஒரு சமயத்தில் ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படும். ஆனால் இது பிலிம் ஃபேர் போல சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் எனப் பல துறைகளில் விருது வழங்கப்படுகிறது. தேர்வுக்குழுவின் தலைவராக பால்கேவின் பேரன் சந்திரசேகர் உள்ளார். இதனால் பால்கே குடும்பத்திலிருந்தும் இந்த விருதுக்கு எதிர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை. மேலும் இதன் இணையத்தளத்தில் இந்த விருது அமைப்பின் நலம்விரும்பிகளாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் பெயர்கள் உள்ளன.

பால்கே பெயரில் வேறு விருதுகள் உள்ளனவா?

ஆமாம். தாதாசாகேப் பால்கே எக்ஸலன்ஸ் விருதுகள், தாதாசாகேப் பால்கே திரைப்ப்பட அறக்கட்டளை விருதுகள், தாதாசாகேப் பால்கே அகாடமி விருதுகள் எனப் பல விருதுகள் பால்கே பெயரில் வழங்கப்படுகின்றன.

*

பால்கே பெயரில் அரசாங்கம் மட்டுமே விருதைத் தரவேண்டும். மற்றவர்களும் அதே பெயரில் தந்தால் அரசு விருதுக்கு என்ன மதிப்பு இருக்கும்? மேலும் இது பால்கேவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது என்று பலரும் அவ்வப்போது கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். இதேபோல பாரத ரத்னா, பத்ம விருதுகள் பெயரிலும் இதர விருதுகள் வழங்கப்பட்டால் நிலைமை என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

2018-ல், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணைச் செயலாளர் அசோக் குமார், ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து நாங்கள் என்ன செய்ய முடியும்? எந்த விதிமுறையில் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்? பால்கேவின் பெயரை அப்படியே யாரும் காப்பி அடிப்பதில்லை. பெயரைச் சிறிது மாற்றி விழா எடுக்கிறார்கள். விழாவுக்குச் செல்பவர்கள்தான் அங்குச் செல்லலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். 2005-ல் மத்திய அரசால் பால்கே விருது பெற்ற ஷியாம் பெனகலும் பால்கே பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பால்கே பெயரில் ஒரு விருதுதான் இருக்கவேண்டும் என அரசு கூறவேண்டும். பால்கே பெயரில் மற்றவர்கள் விருது வழங்கினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆனாலும் ஒவ்வொரு வருடமும் பால்கே சர்வதேச விருதுகள் வழங்கப்படும்போது சமூகவலைத்தளங்களில் பலரும் இவ்விருது குறித்து கேள்வி எழுப்புவதைக் காண முடிகிறது. இதற்கு ஒரே தீர்வு தான், ஒரே பால்கே, ஒரே பால்கே விருது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வரவேண்டும். இதே பெயரில் மற்றவர்கள் விருது வழங்குவதற்குத் தடை போட வேண்டும். அப்போதுதான் பால்கேவுக்கும் பால்கே விருதைப் பெற்றவர்களுக்கும் அரசு உரிய மரியாதை அளித்ததாக இருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in