காக்கா - கழுகு கதையும் விஜயுடனான ஒப்பீடும்: ரஜினி விளக்கம்

விஜய் தன் கண்முன் வளர்ந்த பையன் என்று ரஜினி தெரிவித்தார்.
காக்கா - கழுகு கதையும் விஜயுடனான ஒப்பீடும்: ரஜினி விளக்கம்
https://twitter.com/LycaProductions

ஜெய்லர் விழாவில் தான் கூறிய காகா, கழுகு கதை விஜய்கானது அல்ல என்று லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் காகா, கழுகு கதை குறித்து ரசிகர்கள் மத்தியில் தெளிவுபடுத்தியுள்ளார். விஜய்க்கும், தனக்கும் போட்டி எனக் கூறுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், விஜய் தன் கண்முன் வளர்ந்த பையன் என்றும் ரஜினி தெரிவித்தார்.

தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, சந்திரசேகர் அவரைத் தன்னிடம் அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார், முதலில் படிக்கச் சொல்லுங்கள் என்று அறிவுரை வழங்குமாறு அவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ரஜினி கூறினார்.

இதன்பிறகு, விஜய் திரைத் துறைக்கு வந்து தனது உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்துள்ளதாக ரஜினி தெரிவித்தார். விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ரஜினி, எனக்கு நானும், அவருக்கு அவரும்தான் போட்டி என நாங்கள் இருவருமே கூறிய பிறகும், எங்களுக்குள் போட்டி என்று கூறுவது வேதனையளிப்பதாக அவர் பதிவு செய்தார்.

விஜய் அடுத்து அரசியல், சமூக சேவை என்று நகர இருக்கிற நேரத்தில் போட்டி என்று கூறுவது உண்மையில் வருத்தமளிப்பதாகக் கூறி, இருவரையும் ஒப்பிட வேண்டாம் என இருவரது ரசிகர்களுக்கும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற ஜெய்லர் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கழுகு உயரத்துக்கு காகத்தால் பறக்க முடியாது என்கிற சாராம்சத்தில் ஒரு குட்டிக் கதையைக் கூறினார். இதில் கழுகாகத் தன்னையும், காகமாக நடிகர் விஜயையும் குறிப்பிட்டு ரஜினி பேசியதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, லியோ விழாவில் நடிகர் விஜய் காகா, கழுகு என்று குறிப்பிட்டு பேசியதும் பேசுபொருளானது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in