பிக் பாஸ் 7: இதுபோல நிறைய நடந்திருக்கு... ஆனா இதான் முதல்முறை!

சமூகவலைத்தளங்களில் விடாக்கண்டனாக கமலைக் கழுவி ஊற்றினாலும் அவர் கொடாக்கண்டனாக இறுதி வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை.
இறுதிச்சுற்றில்....
இறுதிச்சுற்றில்....படங்கள் - twitter.com/vijaytelevision

இதுவரை இல்லாத அளவுக்கு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7-வது பருவம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. பிக்பாஸ் அல்டிமேட் உள்பட இதுவரைத் தொடர்ச்சியாக 8 வருடங்களாக பிக்பாஸ்ஸின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்களையே அடப் போங்கடா என வெறுப்பேற்றி, நிகழ்ச்சியை விட்டுப் பாதியிலேயே ஓட விட்ட பெருமையும் இந்தப் பருவத்துக்கே சாரும். அந்தளவுக்கு அராஜகம், அநியாயம், அட்டூழியம் எனக் கலந்துகட்டி ஒருவிதமான எதிர்மறை உணர்வுடனேயே இந்த பிக் பாஸ் பருவம் முடிவுக்கு வந்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராவது மக்கள் மனத்தை அப்படியே அள்ளிக்கொள்வார். அவருக்கு ராஜ் கமல் நிறுவனப் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயம் மக்கள் மனதில் ஓர் இடம் கிடைத்துவிடும். ஓவியா, பரணி, சினேகன், கவின், சான்டி, தர்ஷன், சுரேஷ் சக்ரவர்தி, விக்ரமன், சிவின் போன்றோர் இப்பட்டியலில் இடம்பெறுவார்கள்.

அதையும் தாண்டி கடந்த அத்தனை பருவங்களிலும் வெற்றியாளர்களும் கூட ஏதோ ஒரு வகையில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனா, ராஜு, அபார வெற்றியாளர் பாலா, அசீம் (என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், இவரை வெறுத்த அளவுக்கு விரும்பிய மக்களும் சரிசமமாக இருக்கத்தான் செய்தார்கள்) என அத்தனை பேரும் ஏறத்தாழ 106 நாள்களும் மிகச் சிறப்பாக விளையாடி, எந்தப் போலி வேஷமோ நடிப்பு, நாடகமோ இல்லாமல் அவர்கள் அவர்களாகவே அங்கு வாழ்ந்து, அவர்களின் தனித்தன்மையை மக்கள் மத்தியில் நிரூபித்து, மக்களின் ஓட்டுகளால் ஜெயித்துக் காட்டினார்கள். ஆனால் இந்தமுறை வென்றவரை அப்படிக் கூறமுடியுமா?

அர்ச்சனாவை ஒரு பிடி பிடிப்பதற்கு முன்பு இந்த 106 நாள்களையும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்து விடலாம்.

இதுவரைத் தமிழில் வந்த எந்த ரியாலிட்டி ஷோவுக்கும் இல்லாத ஒரு மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது பருவம் கடந்த வருடம் அக். 2-ம் திகதி (காந்தி பிறந்தநாள்!) கோலாகலமாக ஆரம்பமானது.

எப்போதும் போலவே முந்தைய பருவங்களில் கலந்து கொண்டவர்களின் மாமன், மச்சான், பங்காளி, உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், விஜய் டிவி பிரபலங்கள், பிக்பாஸ் செட்டுக்குப் பக்கத்து செட்டு படப்பிடிப்பில் வந்தவர்கள் என மக்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு கலவையான போட்டியாளர்கள் இம்முறையும் களமிறங்கினார்கள்.

விடுமுறையைக் கழிக்க வந்த ஜாலி பங்களா போல ஆடம்பரமாக இருந்த வீட்டை இம்முறை வித்தியாசமாக இரண்டாகப் பிளந்து பிக்பாஸ் ஹவுஸ், ஸ்மால் பாஸ் ஹவுஸ் எனப் பிரித்திருந்தார்கள். எப்பவுமே வாஸ்து சரியில்லாமல் கட்டி வைத்திருக்கும் சமையலறையை இம்முறை சின்ன வீட்டில் வைத்திருந்தபோதே குறியீடு புரிந்தது. பிறகு வந்த நாள்களில் புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஏரியா ரௌடிகளை மொத்தமாகப் பிடித்து கூண்டில் அடைப்பது போல, வீட்டின் கேப்டனாக வந்த அனைவருமே தனது எதிரி, தன் எதிரியின் எதிரி எனப் பிடிக்காத ஆறு பேரைத் தூக்கி அடைத்துப் பகையை தீர்த்துக்கொள்ளும் ஓர் இடமாக அதைப் பயன்படுத்தியதில் ஸ்மால் பாஸ் ஹவுஸில் தினம் தினம் ரத்த ஆறு ஓடியது. ஆனாலும் ஸ்மால் பாஸ் வீட்டில் தான் மக்கள் அதிக மகிழ்ச்சியாகவும் ஜாலியாகவும் வாழ்ந்தார்கள். ஒரு கட்டத்தில் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் செல்ல கூட்டம் முண்டியடிக்கவே ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு ஸ்மால் பாஸ் ஹவுஸ் மக்களுக்குப் பிடித்த இடமாக மாறியது.

முதல் நாள் இரண்டு கெட் அப்-களில் இரண்டு கமல் வந்து சம்பந்தமே இல்லாத சுய முன்னேற்ற அறிவுரைகளுடன் இரண்டு வீட்டையும் சுற்றிக்காட்டும்போதே..., இருக்கு இங்க ஏதோ ஒரு சம்பவம் இருக்கு... என சந்திரமுகி சாமியார் போல மனதுக்குள் ஒரு குரல் அலறியது. அதன்பிறகு ஆரம்பமானது அந்த மிக நீண்ட அறிமுகப் படலம்.

மொத்தம் பதினெட்டுப் போட்டியாளர்கள். ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள். வாயைத் திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் சிம்பு ரசிகர் கூல் சுரேஷை அதிரடியாக முதலில் களமிறக்கி. பிறகு வரிசையாக ஒவ்வொரு போட்டியாளராக உள்ளே அனுப்பினார்கள்.

யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி, குக் வித் கோமாளி புகழ் ரவீணா தாஹா, முந்தைய பருவத்தில் கவினின் நண்பனாக உள்ளே வந்து கவினுக்கு பளார் என்று செவுளில் ஒரு அறையை விட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி, ராப் சிங்கர் நிக்சன், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடந்து நடந்தே புகழ் பெற்ற வினுஷா தேவி, சான்டி மாஸ்டரின் சீடரும் டான்சருமான மணி சந்திரா, விஜய் டிவியில் வழக்கம்போல் கேரளா கோட்டாவில் வந்த அக்‌ஷயா, பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சரி வெளியிலும் சரி அலப்பறை செய்யும் வனிதா விஜயக்குமாரின் மகள் ஜோவிகா, கடந்த பருவத்தில் போட்டியாளராக இருந்த அமீரின் நண்பி (என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட்டு கோட்டா) ஐஷு, விஜய் டிவியின் ‘ஆஃபீஸ்’, ‘சத்யா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்ற விஷ்ணு விஜய், பல நட்சத்திர நடிகர்களின் படங்களில் தலையைக் காட்டிய மாயா, விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோஸ்’ சீரியல் சரவண விக்ரம், பாடகரும் மலேசியா வாசுதேவனின் மகனுமான யுகேந்திரன், முன்னாள் நடிகை விசித்திரா, கதைசொல்லியாகப் புகழ் பெற்ற பவா செல்லதுரை, இன்னுமொரு பக்கத்து ஸ்டேட் கோட்டாவில் நுழைந்த மங்களூர் பொண்ணு அனன்யா ராவ் (சரி... இதுபோல மற்ற மாநில பிக் பாஸ்களில் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு கோட்டா உண்டா?), திருச்சியைச் சேர்ந்த டான்சர் விஜய் வர்மா என ஒரு பெரிய கும்பலே வீட்டுக்குள் சென்றது.

ஹப்பாடா.. எனப் பெருமூச்சு விட, அடுத்த 28 நாள்களில் இன்னொரு ஐந்து பேரை வைல்டு கார்ட் போட்டியாளர்களாக இறக்கினார் பிக்பாஸ். சின்னத்திரை பிரபலங்கள் தினேஷ், அர்ச்சனா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, துபாய் வானொலியில் ஆர்ஜேவாக இருக்கும் பிராவோ மற்றும் நம் அனைவருக்கும் பரிட்சயமான கானா பாலா ஆகிய ஐந்து பேரும் ஏற்கெனவே மப்பும் மந்தாராமுமாக இருந்த பிக்பாஸ் வீட்டு வானிலையில் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.

இம்முறை வீட்டை இரண்டாகப் பிரித்து வித்தியாசம் காட்டியது போல இன்னுமொரு வில்லங்கமான சமாசாரத்தையும் போட்டியாளர்கள் கையில் திணித்து அனுப்பினார்கள். அதுதான் உரிமைக் குரல் சிகப்புக் கையுறை. வீட்டுக்கு உள்ளே ஏதாவது அநியாயம் நிகழ்ந்தால் அதை உயர்த்தி நியாயம் கேட்கலாம் என்று கொடுத்த அந்த சிகப்புக் கையுறையே பின்னாளில் ஒரு திறமையான போட்டியாளரின் உரிமையை அநியாயமாகப் பறிக்கப் பயன்படுத்தப்பட்டதுதான் பெரும் சோகம்.

ஆரம்பித்த நாள் முதல் பஞ்சாயத்துகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்த பிக்பாஸ் வீட்டில் வெடித்த முக்கியமான சில பிரச்னைகள், சமூக வலைத்தளங்களில் பயங்கரமாகப் பரவி, காட்டுத் தீயாக சில பல வாரங்களுக்கு கொழுந்து விட்டு எரிந்தது. அதில் குறிப்பாக ஜோவிகாவுக்கும் விசித்திராவுக்கும் இடையே நிகழ்ந்த பள்ளிக் கல்வி குறித்த விவாதம் வீட்டுக்கு வெளியேயும் வெடித்தது. கல்வியின் அவசியம் குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள். விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி வரை விவாதிக்கப்பட்ட அந்தத் தலைப்பு, இந்த பிக் பாஸுக்குப் புதிய பார்வையாளர்களைக் கொண்டு வந்தது.

எதையும் இரண்டு வரிகளுக்கு மேல் படிக்க நேரமில்லாத, வாசிப்புப் பழக்கமே இல்லாத இளைய தலைமுறையிடம் ஓர் இலக்கியப் படைப்பைத் திடீரென கொண்டு சேர்த்தால் அவர்கள் எப்படியெல்லாம் மிரளுவார்கள் என்று பவா செல்லத்துரை சொல்லிய கதைகளும் அவை தலைகீழாகப் புரிந்து கொள்ளப்பட்ட விதமும் பறைசாற்றின.

குறிப்பாகப் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை பவா பகிர்ந்து கொண்டது, அதுவரை முட்டைக்கும் வெங்காயத்துக்கும் மட்டுமே சண்டை போட்டுக்கொண்டு இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஓர் இலக்கிய சண்டையை உருவாக்கியது.

இந்த நிலையில் ‘என்னோட டார்க் சைடைப் பார்க்க வந்தேன்’ என்று வந்த பவா செல்லத்துரை, மற்றவர்களின் டார்க் சைடுகளைத் தாங்க முடியாமல் இரண்டாவது வாரமே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும், தவறான எடிட்டிங்கினால், தான் செய்யாத ஒன்றை (எச்சைத் துப்புதல்) நிகழ்ச்சியில் காண்பித்துள்ளார்கள் என விஜய் டிவி மீதே குற்றம் சுமத்தினார். இதனால் இந்நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மை ஓரளவு குறைந்ததென்னவோ உண்மை.

இதனால் வந்த முதல் வாரத்தில் இருந்தே மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வந்த மாயா அவ்வார எலிமினேஷனில் இருந்து தப்பித்தார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா இல்லையா என்பது எல்லாம் விஜய் டிவிக்கே வெளிச்சம். ஆனால் மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தது போல, அந்த வாரம் எஸ்கேப் ஆன மாயா அதன் பிறகு இறுதி வரை மக்கள் வைத்த பொறிக்குள் மாட்டாமல் தப்பித்து வந்தது எப்படி என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. இதன் காரணமாக நிகழ்ச்சி குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் மேலும் அதிகமாகின. ஒருவேளை, விஜய் டிவி இதைத்தான் விரும்புகிறதோ?

அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டு கொண்டிருந்த பிக்பாஸ் வண்டி 34-வது நாள் மொத்தமாகக் குடை சாய்ந்தது. இந்த மொத்தப் பருவத்தையும் தூக்கி நிறுத்தி சுவாரசியமாக்கிய ஆட்ட நாயகன் பிரதீப், ரெட் கார்ட் தந்து வெளியே அனுப்பப்பட்டார். யாருமே எதிர்பாராத டிவிஸ்ட் அது. ‘பிரதீப் வெளியேற்றப்பட்டது சரியா? தவறா?’ என்ற விவாதம் நிகழ்ச்சி முடிந்தும் கூட இன்னும் தொடர்கிறது.

பிரதீப் நிறைய அலப்பறைகள் பண்ணினார் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே அளவு அலப்பறைகளைச் சொல்லப்போனால் அதற்கும் மேல் மோசமான அழிச்சாட்டியங்களை அங்கிருக்கும் ஏனைய போட்டியாளர்கள் செய்திருக்கும் பட்சத்தில் பிரதீப்புக்கு மட்டும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றக் காரணம் என்ன?

அடிப்படையில் ஒரு கூர்மையான, புத்திசாலியான போட்டியாளர், பிரதீப். இதுவரை தமிழ் பிக் பாஸில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் பிரதீப் அளவுக்கு இந்த ஆட்டத்தை வேறு யாரேனும் நேசித்து இருப்பார்களா என்பதும் புரிந்து கொண்டிருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். அந்தளவுக்கு பிக்பாஸ் ஆட்டத்தை புத்திசாலித்தனமாக விளையாடிய பிரதீப்பை உள்ளே இருந்த 6 பெண்கள் வுமன் கார்டைப் பயன்படுத்தி, திட்டம் போட்டு, கட்டம் கட்டித் தூக்கிய சம்பவத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்ல, அதைத் தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கிய கமல் ஹாசனின் புகழும் அதலபாதாளத்துக்குள் சரிந்தது.

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நிகழ்ச்சிகளில் பிரதீப்புக்குக் கிடைத்த கைத்தட்டலை வைத்தே அவருக்கு இருக்கும் மக்களின் அமோக ஆதரவை மோப்பம் பிடித்து, அதற்காகப் பொறி வைத்து, வலை விரித்து வீழ்த்தியது போல, எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாத ஒரு மிகப் பெரிய, பாரதூரமான பொய்க் குற்றச்சாட்டுக்கு, வீட்டில் இருக்கும் 13 நபர்கள் உரிமைக் குரல் எழுப்பி, அதுதொடர்பாக தன் தரப்பு வாதத்தைக் கூட சொல்ல பிரதீப்புக்கு அனுமதி வழங்கப்படாமல் கமலால் நிகழ்ச்சியை விட்டே அவர் வெளியேற்றப்பட்டது காவிய சோகம். இன்று வரை அந்தப் பெண்களாலோ, இல்லை விஜய் டிவியாலோ, இல்லை கமல் ஹாசனாலோ பிரதீப் மேல் வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டைக் கூட நீரூபிக்க முடியவில்லை.

பிரதீப்பின் வெளியேற்றம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பிக்பாஸ் ரசிகர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. justice for pradeep என்றொரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் சேனல் தரப்பில் இருந்து இதற்கு எந்த எதிர்வினையும் வரவில்லை.

பிரதீப் வெளியேற்றத்தைத் தொடர்ந்து... மாயாவின் ஆட்டம் ஆரம்பமானது. மாயாவும் மிகத் திறமையான ஒரு போட்டியாளர் தான். புத்திசாலியும் கூட. அவரின் நடிப்பு, பாடல் திறமைகளை தாண்டி அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு மிக அபாரம். ஆனால் அவர் அதை எல்லாம் தனக்குள் மறைத்து வைத்து விட்டு, இந்தப் போட்டிக்காக ஓர் ஆட்டம் ஆடுகிறேன் என்று சொல்லி அதற்காகச் செய்த மோசமான, மனிதாபிமானம் அற்ற பல விடயங்கள் மக்கள் மத்தியில் அவர் பால் மேலும் மேலும் வெறுப்பை அதிகரித்தது. அவர் ஒருவராலேயே இந்த வருட மொத்த பிக் பாஸ் ஆட்டமும் பாழானது என்பது ரசிகர்களின் குமுறல்.

கூடவே சேர்ந்துகொண்ட பூர்ணிமாவும் இதனால் பெரும்பாலான மக்களின் வெறுப்புக்கு ஆளானார். மாயா இல்லாமல் தனித்து ஆடி இருந்தால் இன்று அர்ச்சனாவின் இடத்தில் பூர்ணிமா இருந்திருப்பார். அந்தளவு திறமையான போட்டியாளர். ஆனாலும் இறுதி வாரங்களில் 16 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது உண்மையிலேயே ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

சக போட்டியாளர் வினுஷாவைப் பற்றி நிக்சன் சொன்ன மிக மோசமான ஒரு கமெண்ட், சர்ச்சைக்கு ஆளானது. அதேபோல ஐஷுவோடு காதல், மாயாவோடு கூட்டணி என்று தடம் மாறி போன நிக்சன் முதல் சில வாரங்களில் இருந்தது போலவே தொடர்ந்திருந்தால் நிச்சயம் இறுதி வாரம் வரை வந்திருப்பார்.

அதேபோல ஆரம்ப நாள்களில் காதல், கத்தரிக்காய் என்று பெயரைக் கெடுத்துக்கொண்ட இன்னொரு ஜோடி மணி - ரவீணா. ஆனால் நிக்சன் - ஐஷு போல அல்லாமல் அவர்களுக்குள் இயற்கையான ஓர் அழகிய அன்பும் நேசமும் இருக்கிறது. ஆனால் ஒருசில விடயங்கள் திரைமறைவில் இருக்கும்போது தான் அதற்கு மரியாதை. ஃபேமிலி டாஸ்க்கில் உள்ளே வந்த ரவீணாவின் அமெரிக்கா ஆண்ட்டி செய்த சம்பவத்தில் ஆடிப் போன மணி (ரசிகர்களும்தான்!), அதன் பின் சுதாகரித்து ஆட ஆரம்பித்தது அவரை இறுதி நாள் மேடை வரை கொண்டு வந்து 2-ம் இடத்தைப் பிடிக்க வைத்தது.

வைல்டு கார்டாக வந்தாலும் ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆம்பித்த தினேஷ் ஒரு மிக வலிமையான போட்டியாளராகத் திகழ்ந்தார். வெற்றி நிச்சயம் என அதை நோக்கியே சென்று, மிக உறுதியாக விளையாடிய ஓர் ஆட்டக்காரர். ஆனால் விசித்திராவுடனான மோதல்கள் அவரை வெற்றிக் கோப்பைக்கு அருகில் செல்ல விடாமல் தடுத்துவிட்டது. அந்த இடத்தில் மட்டும் சறுக்காமல் இருந்திருந்தால் தினேஷ் கூட மக்களின் அமோக ஆதரவுடன் கோப்பையைத் தட்டியிருப்பார்.

விசித்திரா, விஜய், ஜோவிகா பிராவோ போன்ற திறமையான போட்டியாளர்கள் உள்ளே இருந்தாலும் அவர்களின் எதிர்மறை குணங்கள் அவ்வப்போது வெளியே வந்ததால் மக்கள் ஆதரவை இழந்து வெளியேறினார்கள். யுகேந்திரன், வினுஷா, அக்‌ஷயா, கானா பாலா போன்ற பிள்ளைப் பூச்சிகளுக்கான இடமல்ல இது. ரத்த பூமி. இங்கு தக்கன மட்டுமே தப்பிப் பிழைக்கும்.

ஒவ்வொரு பருவத்திலும் வலிமையான போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பிறாண்டிக்கொண்டு, மூர்க்கமாகச் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போது அந்தக் கலவரத்தில் ஒரு மிக்ஸர் ஆசாமி மக்கள் கண்ணில் இருந்துத் தப்பி நீண்ட வாரங்கள் உள்ளே தங்கி விடுவார். இந்தமுறை அது சரவண விக்ரம்.

மக்கள் ஓட்டுக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை நிகழ்ச்சியின் சுவரசியத்தை அதிகரிக்க ஒருமுறை உள்ளே கொண்டு வந்தார்கள். அவரும் பத்தாயிரம் வாலா பட்டாசு போல வெடித்துத் தள்ளி அவர் பங்களிப்பைச் சிறப்பாக செய்து விட்டுப் போனார். அந்த எதிர்பார்ப்பில் இம்முறை மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்ட விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவருமே நமத்துப் போன பட்டாசாகி வந்த வேகத்திலேயே வெளியேறினார்கள்.

சென்ற வருடங்களை போல இந்த வருடம் பரபரப்பான குறும்படங்கள் எதுவுமே இடம் பெறவில்லை. உப்புச்சப்பு இல்லாத படங்களைப் போட்டு ஒரு சில வாரங்களைச் சமாளித்தார்கள். போட்டியாளர்களுக்குச் சுவாரசியமான எந்த டாஸ்க்கும் இம்முறை கொடுக்கப்படவில்லை. ஒருகாலத்தில் கையில் டாட்டூ போடு, முடிக்குச் சிகப்பு மை பூசு, தாடியைப் பாதி வழித்துக் கொள், மாட்டுச் சானத்தில் முக்கிக் குளி என்பது போன்ற பயங்கரமான டாஸ்க்குகளைக் கொடுத்த பிக்பாஸ் கிரியேடிவிட்டி டீம் இம்முறை மொத்தமாக விடுமுறையில் சென்றுவிட்டார்கள் போல. அதனாலேயே வாரா வாராம் ஸ்பான்சர் டாஸ்க் என்று எதையோ வைத்து ஒப்பேற்றினானர்கள். இதனால் பெரும்பாலான நேரங்களில் போட்டியாளர்களும் செய்வதற்கு வேலை எதுவும் இல்லாமல் மூலைக்கு மூலை ஏ டீம், பி டீம் எனப் பிரிந்து, புறம் பேசியதுதான் இந்தப் பருவத்தில் அவர்கள் பண்ணிய பிரதான டாஸ்க்.

விசுவின் இளைய சகோதரர் போன்ற ஒரு குரலில் பேசிய ஸ்மால் பாஸும் பாதியில் மெடிக்கல் லீவில் போய் விட்டார் போல. ஃபினாலே அன்று தான் மறுபடி வந்தார். இம்முறை கணீர் குரலோன் பிக்பாஸையே போட்டியாளர்கள் லெஃப்ட்டில் தான் டீல் செய்தார்கள். நான் சொல்றதக் கொஞ்சம் கேட்டுத் தொலைங்கடா என பிக்பாஸே காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடும் நிலைமைக்குப் போட்டியாளர்கள் அவரை கதற விட்டார்கள். போட்டியாளர்களுக்குத் தண்டனை கொடுக்க என்று கட்டப்பட்ட சிறையைக் கூட, ஒரு கட்டத்தில் இழுத்துச் சாத்தி விட்டார்கள். அந்தளவுக்குப் போட்டியாளர்களின் கிரைம் ரேட் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.

பொதுவாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு போட்டியாளர் அதிக விமர்சனத்துக்கு ஆளாவார். ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக போட்டியாளர்களுக்குப் பதில் மக்களால் அதிக விமர்சனத்துக்கு ஆளானவர் கமல் ஹாசன் தான். மாயாவுக்கு ஒருதலைப்பட்ச ஆதரவு, போட்டியாளர்களைப் பாரபட்சமாக நடத்துகிறார், கண்டிப்பு காட்ட வேண்டிய இடங்களில் தடவிக் கொடுக்கிறார் எனப் பலதரப்பட்ட விமர்சனங்களை கமல் எதிர்கொண்டார். என்னதான் நெட்டிசன்கள் அவரைச் சமூகவலைத்தளங்களில் விடாக்கண்டனாக அவரைக் கழுவி ஊற்றினாலும் அவர் கொடாக்கண்டனாக இறுதி வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. இத்தனை விமர்சனங்களால் (அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களாலும்) அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என்று சந்தேகமாக உள்ளது.

106-வது நாளான நேற்றைய தினம், கடைசியாக எப்போதும் போல வீட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய, நமக்கே மனதைப் பிசைய ஆரம்பித்தது. ஏதோ இனம் புரியாத ஒரு பிரிவுணர்ச்சி உண்டானது. ஒரு குரல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பிக் பாஸின் குரல் ஒரு நல்ல உதாரணம். அந்த 106 நாள்களாக நாமும் அந்தக் குரலுடன் சேர்ந்து பயணிக்கிறோம். எனவே பிரிவின் வலி நமக்குள்ளும் கடத்தப்படுகிறது.

அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி ஃபினாலே பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்குப் பிறகு, ஏழாம் பருவத்தின் வெற்றியாளராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். ஐம்பது லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், G Squar plot மற்றும் ஒரு சொகுசு காரும் அவருக்குப் பரிசுகளாக வழங்கப்பட்டன. 2-வது இடம் பிடித்த மணிக்கும் ஒரு G Square plot பரிசாக வழங்கப்பட்டது. மாயா, தினேஷ், விஷ்ணு முறையே அடுத்தடுத்த இடங்களை பெற்றார்கள்.

பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மாயா குரூப்பைத் தைரியமாக எதிர்த்து நின்றார் என்கிற ஒரே காரணத்துக்காக ஆரம்பம் முதலே அர்ச்சனாவுக்கு மக்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. குறிப்பாக பிரதீப் விஷயத்தில் அவருக்கு ஆதரவாக அர்ச்சனா பேசியதில் இருந்து ரசிகர்கள் அர்ச்சனாவைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இது இறுதி வரை அவரைக் காப்பாற்றியது.

மகுடம், பரிசுத்தொகை, புகழாரம் இவை எல்லவற்றையும் தாண்டி இந்த நிகழ்ச்சியின் உண்மையான வெற்றியாளர் யார் என்றால் எந்த ஓர் இறுக்கமான சூழலிலும் தன் சுயத்தை இழக்காமல், யாரையும் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ புண்படுத்தாமல், எவ்விதப் போலி நாடகமும் இல்லாமல் இயல்பாக இந்த வீட்டில் வாழ்ந்து, கொடுக்கப்படும் டாஸ்க்குகளைச் சிரத்தையோடு சிறப்பாக செய்து, தனக்கிருக்கும் திறமைகளை வெளிக்காட்டி, அதை மேம்படுத்தும் வழிகளை முன்னெடுத்து, தனது இயற்கையான நற்குணங்களாலும், நல்ல பண்புகளாலும் சமூகத்துக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்த 106 நாள்களும் வாழ்ந்து, சவால்களை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்கும் ஒருவரே இதன் உண்மையான வெற்றியாளராக ஆக முடியும். அந்த வகையில் பார்த்தால் இந்த அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மணி சந்திரா தான் இந்தப் போட்டியின் உண்மையான வெற்றியாளர் என்றும் கூறலாம்.

இந்த நிகழ்ச்சி தந்த மகிழ்ச்சி, கோபம், சீற்றம் எல்லாமே இன்னும் ஓரிரு நாள்களில் நம்மை விட்டு அகன்றுவிடும். போட்டியாளர்களின் பெயர்கள் கூட இன்னும் சில நாள்களில் மறந்து போகும். அடுத்தப் பருவம் வரும்போது பாதிப் பேர்களின் பெயர்கள் கூட நினைவில் இருக்காது. இன்னும் இரண்டு வருடங்கள் கடந்தால், 7-வது பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பது கூட விக்கிபீடியாவைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்வோம்.

எப்போதும் கமல் சொல்வது போல இந்த நிகழ்ச்சி ஒரு social experiment for human behaviour. இது ஒரு சமூகத்தின் கண்ணாடி. நமக்குள் ஒளிந்திருக்கும் நேர், எதிர்மறைக் குணங்களை நமக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கண்ணாடி. நம்மைக் கவர்ந்த பிக் பாஸ் போட்டியாளர்களின் மேன்மையான குணங்களை நாமும் வளர்த்துக் கொண்டும், அவர்களிடம் நாம் வெறுத்த எதிர்மறையான குணங்களைத் திருத்திக் கொண்டும்... சமூகத்தில் ஒரு சிறந்த மனிதனாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் கற்றவை என்ன, பெற்றவை என்ன என்கிற சுய பரிசீலனைதான் இதைப் பார்ப்பதற்கு நாம் முதலீடு செய்யும் 106 நாள்களுக்கான ஒரே நிகர லாபமாக இருக்க முடியும்.

- றின்னோஸா

டென்மார்க்கில் வசிக்கும் இலங்கைத் தமிழர். உலகப் போர்களும் ஐரோப்பிய வரலாறும், யூரோ டெக், ஐரோப்பிய புராணங்களும் அசட்டுத்தனமான நம்பிக்கைகளும் என மூன்று நூல்களை எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in