‘பிக் பாஸ்’ அர்ச்சனா: மாயாப் புயலை வெற்றிகரமாக எதிர்கொண்டது எப்படி?

மாயா என்பவர் தனிநபர் மட்டுமல்ல என்பதைப் பார்வையாளர்கள் போகப்போக உணர்ந்திருந்தார்கள்.
வெற்றியைக் கொண்டாடும் அர்ச்சனா
வெற்றியைக் கொண்டாடும் அர்ச்சனாபடம் - twitter.com/vijaytelevision

பிக்பாஸ் 7 பருவத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் அர்ச்சனா. வைல்ட் கார்டில் வந்து வெற்றி பெற்ற முதல் போட்டியாளர். கடந்தமுறை வைல்ட் கார்டில் வந்தவர்களில் அதிகபட்சமாக மூன்றாவது இடத்தைச் சிலர் பெற்றிருக்கிறார்கள், கடைசி இருவரில்கூட ஒருவரும் வந்ததில்லை. மேலும், பிக் பாஸ் கோப்பையை வென்ற 2-வது பெண் போட்டியாளர், அர்ச்சனா. 2-வது பருவத்தில் ரித்விகா வெற்றி பெற்றார். கடந்த நான்கு வருடங்களிலும் பெண் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை. வெற்றிக்கு நெருக்கமாகக்கூட வந்ததில்லை. 5-வது பருவத்தில் பிரியங்கா இரண்டாமிடம் வந்தார். அந்த விதத்தில் அர்ச்சனாவின் வெற்றி போற்றக்கூடியதுதான். ஆனால், அதையும் தாண்டி அவருடைய வெற்றியினால் உண்டாகும் ஒருவித கொண்டாட்ட உணர்வுக்குக் காரணம் வேறு.

முதல் சில வாரங்களுக்கு பிக்பாஸ் 7 ஒரு மார்க்கமாகத்தான் சென்றுகொண்டிருந்தது, இது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் அதன் தீவிர ரசிகர்களுக்கே இருந்தது. சுமார், பிடிக்காது, மோசமாக வெறுக்கிறேன் என்கிற மூன்று அளவுகோல்களில் மட்டுமே போட்டியாளர்கள் இருந்தார்கள். அதிலிருந்து பிரதீப் மக்கள் ஆதரவு பெற்றவராக எழுந்து வந்தார். இந்தச் சூழலில்தான் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகரிக்க ஐந்து புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்களை உள்ளே இறக்கினார்கள். அதில் வந்த ஒருவர்தான் அர்ச்சனா. வார எவிக்‌ஷனில் ஒரு போட்டியாளரை வழியனுப்பிவிட்டு சோகமாக ஹௌஸ்மேட்ஸ் உள்ளே திரும்பும்போது... மூடப்போகும் கதவிடுக்கு வழியாக ஒரு இளம்பெண் நுழைந்து வருவார் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அப்படியொரு அறிமுகத்தைத்தான் தந்தார் அர்ச்சனா. இதரப் போட்டியாளர்கள், அப்போது இருந்த கடுப்பில்... வாம்மா நீயும் ஒரு வைல்ட் கார்டா எனச் சலித்துக் கொண்டார்கள். ஒரு வெற்றியாளரின் நுழைவு இதைவிடச் சாதாரணமாக இருக்க முடியாது.

அர்ச்சனா உள்ளே வந்த முதல் நாளே மாயாவின் குழுவுடன் இணக்கமாகச் செயல்பட நட்பழைப்பு விடுத்துப் பேசினார். ஆனால் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கு அப்படியொரு இதமான சூழலைக் கொடுக்கும் எண்ணமெல்லாம் மாயாவின் புல்லி கேங்குக்கு இல்லை. அர்ச்சனா, தினேஷ் போன்றோரிடம் வித்தியாசமாகவே நடந்து கொண்டனர். தினேஷ் பக்குவப்பட்ட ஆளானதால் இதுவே யதார்த்தம் என்று சூழலைப் புரிந்துகொண்டார். அர்ச்சனாவால் இந்தச் சூட்டைத் தாங்கமுடியவில்லை. முதல் நாளில் இருந்தே அழுகை ஆரம்பித்துவிட்டது. வைல்ட் கார்ட் எதிர்ப்பு மனநிலையின் ஒரு பகுதியாக அர்ச்சனா, தினேஷ் உள்பட ஐந்து வைல்ட் கார்டுகளையும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அன்றே அனுப்பினார், அவ்வாரத்தின் கேப்டன் பூர்ணிமா. அதோடு நில்லாமல் சீண்டுவது, பேசுவதற்கெல்லாம் கூட்டமாகச் சேர்ந்து சிரித்து நக்கலடிப்பது எனப் புதியவர்களை மனதளவில் பலவீனமாக்கும், காயப்படுத்தும் தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர் புல்லி கேங் கூட்டணியினர்.

மாயா - பூர்ணிமா தலைமையில் விக்ரம், நிக்சன், ஐஷு, அக்‌ஷயா இருந்த அணியில் புதிதாக ரவீணாவும் ஜோதிகாவும் பிரதீப்பும் இந்தக் கூட்த் தாக்குதலை மிகுந்த கொண்டாட்டத்துடன் செய்தனர். அந்தத் தாக்குதலை தினேஷ் எதிர்க் கிண்டல் மூலமாகவும் அர்ச்சனா அழுகையினாலும் எதிர்கொண்டார்கள். இதனாலேயே ஆரம்பத்தில் மிகுந்த பலவீனமான போட்டியாளராக அர்ச்சனா பார்க்கப்பட்டார். எதற்கெடுத்தாலும் அழுவார் என்று போட்டியாளர்கள் மத்தியில் அவரைப் பற்றிய ஓர் எண்ணம் உண்டானது. இதோடு அடிக்கடி மனச்சோர்வு என மருத்துவர் அறைக்குச் செல்வது, மாத்திரைகள் எடுப்பது என அர்ச்சனாவின் நிலைமையும் மோசமானது. இதையும் எள்ளி நகையாடிய புல்லி கேங்க், நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அர்ச்சனாவும் தனக்கு க்ளஸ்ட்ரோபோபியா போன்ற பல பிரச்னைகள் இருப்பதை அடிக்கடிச் சொல்வது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது.

அந்த வாரத்தில்தான் பிரதீப், கூல் சுரேஷுடன் பிரச்னையை ஆரம்பித்து பின்னர் அதை மாயாக்கூட்டம் கைப்பற்றி, பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பும் அளவுக்கு எடுத்துச் சென்றது. பிரதீப்பை அனுப்பிய அடுத்த வாரமும் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா போன்றோரை ஸ்மால் பாஸ் இல்லத்திலேயே வைத்தார் அவ்வாரத் தலைவர் மாயா. இந்தப் பருவத்தை வடிவமைத்த வாரம் அது. கிட்டத்தட்ட எல்லாப் போட்டியாளர்களின் தலைவிதியையும் மாற்றி அமைத்த வாரமும் அதுதான். பிரதீப்பை அனுப்ப வுமன் கார்டை பயன்படுத்தியது தவறு என விசித்ராவும் அர்ச்சனாவும் நாமினேஷன் நேரத்தில் சொல்ல, அது பூதாகரமாக வெடித்தது.

சமையற்கட்டில் நின்று கொண்டிருந்த விசித்ரா, அர்ச்சனா ஆகிய இருவர் மீதும் ஆங்காரம் கொண்டுப் படையாகத் திரண்டு வந்து திட்டி, சித்ரவதை செய்தது புல்லி கேங்க். பிரதீப் வெளியே சென்றதற்குக் காரணப் பழி தங்கள் மேல் விழாது என நினைத்திருந்தவர்களுக்கு வுமன் கார்ட் என்ற வார்த்தையைக் கேட்டதும் இம்மாதிரி பேச்சுக்கள் தங்களைக் குற்றவாளிக் கூண்டில் உடனடியாக ஏற்றும் என்கிற பதற்றம் தொற்றிகொள்ள ஆரம்பித்தது. தங்களது வழக்கமான கூட்டுச் சீண்டல் சித்ரவதை மூலம் வாயடைக்க செய்துவிடலாம் என வந்துக் குதித்துச் சண்டையிட்ட புல்லி கேங்கை ஒருமாதிரியாக அர்ச்சனாவும் விசித்ராவும் எதிர்கொண்டனர். ஒருகட்டத்தில் விசித்ரா பலமாக இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு அர்ச்சனாவைக் குறிவைத்து தாக்குதலைத் தீவிரபடுத்தினர்.

ஒரு கட்டத்தில் பின்னிரவில் பஞ்சாயத்தில் பேசி முடிவெடுப்போம் என வீட்டுக்குள் ஒளிந்துகொண்டிருந்த அர்ச்சனாவை நைச்சியமாகப் பேசி வெளியே கூட்டிவந்து அதே கூட்டுத் தாக்குதலை செய்து நிலைகுலையச் செய்து, அழவைத்தனர். அதோடு உன் மெடிக்கல் கண்டிஷன் மோசமாக உள்ளது, மன நல மருத்துவரிடம் போ என கொக்கரித்தனர். மாயாவும் பூர்ணியும் ஐஷுவும் ஒருபடி மேலே சென்று அர்ச்சனாவால் தங்களது மனநலமும் பாதிக்கப்படுகிறது என புது உருட்டை உருட்டினார்கள். முத்தாய்ப்பாக ஒரு சைக்கோவை (பிரதீப்) அனுப்பிவிட்டு இன்னொரு சைக்கோவை (அர்ச்சனா) உள்ளே அனுப்பியிருக்கிறார்கள் எனக் குறைப்பட்டுகொண்டார்கள்.

இதனால் கமல் நிச்சயமாக மாயாவைக் கண்டிப்பார் என பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் கண்டிக்காமல் மாயவை கமல் மென்மையாக நடத்தியதுதான் இந்தப் பருவத்தில் கமலுக்கான சறுக்கலின் தொடக்கமாக அமைந்தது.

இந்தச் சண்டையை அன்றோடு முடிக்காமல் அடுத்த நாளுக்கும் எடுத்து சென்றது புல்லி கேங்க். ஸ்மால் பாஸ் வீட்டினருக்கான அந்த வாரத்து பல்தேய்க்கும் பிரஷ்கள், சானிடரி நேப்கின்களைக் கொடுக்காமல் எடுத்து வைத்துக்கொண்டார் மாயா, ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எல்லோரும் பலமுறை கெஞ்சிக் கேட்டும் மாயா தரவில்லை. இதைக் கண்டித்து ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு விசித்ரா வெளியேறி தோட்டத்து சோஃபாவில் அமர்ந்தார். அதோடு அர்ச்சனாவும் இணைந்து கொண்டார். அதிலிருந்து ஆரம்பித்தது அர்ச்சனாவுக்கான ஏறுமுகம். அந்த வாரயிறுதியில் புல்லி கேங்கின் கொடுமைகளைத் திறம்பட எதிர்கொண்ட தினேஷ், விசித்ரா, அர்ச்சனா என மூவருக்கும் அரங்கில் இருந்த பார்வையாளர்களிடம் உற்சாகமான கைத்தட்டுக்கள் கிடைத்தன. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் அர்ச்சனாவின் கிராஃப் படுவேகமாக மேலேறியது. அதன்பின் ஆதரவுக் கணக்கெடுப்புத் தளங்களில் அவருக்கான ஆதரவு 40% வரை தொட்டது. அந்தச் சூட்டை அவர் குறைய விடவே இல்லை. ஒவ்வொரு வாரமும் தன் பெயர் உச்சரிக்கப்படும்படி வைத்துகொள்ள அவரால் முடிந்தது. கமலின் வாரயிறுதி நிகழ்ச்சிகளில் அவருக்கான கைத்தட்டுக்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன. மாயா தலைமையிலான குழுவைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுபவராகப் பார்க்கப்பட்டார்.

ஆரம்ப நாள்களில் பலவீனமானவராக எதற்கும் அழுபவராக, மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவராகக் காட்டிக்கொண்ட அர்ச்சனாவிடம் பிறகு அந்தச் சிக்கல்கள் தென்படவில்லை. அல்லது அவை பொதுவுக்கு வரவில்லை. அழுகை மட்டும் அவ்வபோது சூழலைப் பொறுத்து வந்து போனது.

அர்ச்சனாவின் கதையை மொத்தமாகக் கவனித்தால் அவர் அதிகமான நேரங்களில் தன்னைச் சுற்றியே சிந்திப்பது தெரியும். தன்னை வேலை வாங்கினால் மனம் ஒப்பாது. தனக்கான வாராந்திர வேலைகளைத் தட்டிகளித்தவர்களில் அவரே பிரதானவர். இதை அர்ச்சனாவுமே பலசமயம் சிரித்தபடியே ஒப்புக் கொண்டார். அவருக்கு சமையல் வேலை கொடுத்தால், அடுப்புப் பக்கத்தில் ஜம்மென சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு, அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என பாதி நேரம் மற்றவர்களை வேலை வாங்குவார். குடும்ப வாரத்தில் விருந்தாளியாக வந்த தங்கையிடமும் அமர்ந்தபடி வேலை வாங்கினார். விசித்ராவும் இதைப் பின்னர் சுட்டிக்காட்டினார்.

அர்ச்சனாவைத் தக்காளிச் சட்னி பொம்மை என்றார் கமல். அதாவது தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்ற இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்ற அர்த்தத்தில். தன்னைப் பற்றி அழுபவர் என்கிற முத்திரை குத்தல் வீட்டினுள் நடப்பதாக புலம்புவார். ஆனால் கண்ணீரைத் துடைத்துவிட்டு அடுத்தக் கணம் விக்ரமை மிச்சர் என அழைத்து முத்திரை குத்துவார். விஷ்ணுவை விஷ்ணு குஷ்னு எனச் செல்லமாக அழைத்துக் கடுப்பேற்றுவார். ஆனால் தன்னைத் தொட்டாற்சிணுங்கி என்றதும் புலம்புவார். வினுஷாவைப் பற்றி நிக்சன் சொன்ன உடல் குறித்த கருத்துக்கு முதலில் நிக்சனுக்கு ஆதரவாக, ஆறுதலாகப் பேசிய அர்ச்சனா பிறகு கல்லூரி டாஸ்க் முடிந்ததும் நிக்சனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதே வினுஷா சர்ச்சையை பாய்ண்டாகக் கொண்டுவந்து எதிர்த்துப் பேசினார். அவர் பேசிய கருத்து சரியாக இருந்தாலும் தேவைக்கும் சூழலுக்கும் ஏதுவாக தனக்குப் பலனளிக்கும்படி ஒரே விஷயத்தை இரு எதிர்முனைகளில் இருந்தும் அவரால் பேசமுடியும் என்பதை வெளிப்படுத்தியது.

அர்ச்சனா பல்துறை வித்தகர், நன்றாகப் பாடக்கூடியவர். அதுவும் உச்சஸ்தாயியில் கடினமான பாடல்களை எடுத்துப் பிரமாதமாகப் பாடக்கூடியவர். இங்கு யுகேந்திரன் இருந்தார், முந்தைய பருவங்களில் பல பாடகர்கள் இருந்தார்கள். ஆனால் யாருக்குமே கிடைக்காத வரவேற்பு மக்களிடத்தில் அர்ச்சனாவின் பாடல்களுக்குக் கிடைத்தன. இது எந்த அளவுக்குச் சென்றது என்றால், மாயாவின் அக்கா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது மாயாவையும் அடிக்கடிப் பாட சொல்லி வற்புறுத்தினார். அந்தக் குறிப்பைப் பிடித்துக்கொண்டு மாயாவும் கடைசி நாள் வரை பாடிக்கொண்டிருந்தார்.

அர்ச்சனா ஒரு தொகுப்பாளர் என்பதால் பேச்சுத்திறமை பற்றி சொல்லவேண்டியதில்லை. தெளிவாக தனது கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைக்கக்கூடியவர். ஒரு பிரச்னையில் பாய்ண்ட் பிடித்து பேசும்போது தனது கருத்துகளை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக அனாயசமாக அடுக்கக்கூடியவர். அதோடு அவரது பெரிய கணீர் குரலும் அதற்கு வலு சேர்க்கும். இதை சத்தமாகப் பேசி எங்களை அடக்கி விடுகிறாய என விக்ரம் போன்றவர்கள் குற்றம் சுமத்தியதுண்டு.

டான்ஸ் மாரத்தான் வாரத்தில் திமிறு பட வில்லியான ஈஸ்வரி பாத்திரத்தைத் திறம்பட செய்து அந்த வாரத்தின் சிறந்த ஆட்டக்காரரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிப்புமே தனக்குச் சிறப்பாக வரும் என அந்த வாரம் வெளிப்படுத்திக் கொண்டார்.

அவர் நல்ல அழகு. அதோடு தன்னைச் சரியாக வெளிப்படுத்திக் கொள்ளும் திறனும் இருந்தது. அர்ச்சனா மேக்கப் போடாமலோ ஏனோதானோ என உடையணிந்தோ பெரும்பாலும் பார்த்திருக்க முடியாது. எந்நேரமும் சரியான தோற்றப் பொலிவோடு இருப்பார். அவரது ஆடை ரசனைகளும் நேர்த்தியானவை.

பிற்காலத்தில் புல்லி கேங்கிடம் உடன்பட்டு சென்றாலும் யாரையும் அவர் துன்புறுத்தவில்லை. புல்லி கேங்கைத் தவிர அர்ச்சனாவால் பாதிக்கப்பட்டவர் என யாரையும் சொல்ல முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மாயாவை எதிர்த்து யாரால் ஜெயிக்க முடியுமோ அவருக்கே போட்டியில் வெற்றி கிடைக்கும் என்கிற நிலை உருவானது. காரணம் மாயா என்பவர் தனிநபர் மட்டுமல்ல என்பதைப் பார்வையாளர்கள் போகப்போக உணர்ந்திருந்தார்கள். பெருஞ்சுவரைத் தகர்ப்பவருக்கே வெற்றி என்பதால் கடைசி வாரங்களில் அதிக ஓட்டுகள் அர்ச்சனாவுக்கு விழுந்தன. மாயா நாமினேஷனில் வந்த ஒவ்வொரு வாரமும் சமூகவலைதளங்களில் அவருக்கு பெரிய எதிர்ப்பு இருக்கும். அவர்தான் அதிகாரப்பூர்வமற்ற மாதிரி ஓட்டெடுப்புத் தளங்களில் கடைசியாக இருப்பார். ஆனால் மாயா அந்தந்த வாரங்களில் தக்கவைக்கப்படுவார். அதேபோல் கடைசி வாரத்தில் மாயாவுக்குத்தான் பிக் பாஸ் கோப்பையைக் கொடுக்கப் போகிறார்கள் என்கிற வதந்தி சமூகவலைதளத்தில் உலவியது. அப்படியொரு ஆபத்து நிகழாமல் பார்த்துக்கொண்டார் அர்ச்சனா. அதற்கே அவருக்கு ஆயிரம் நன்றிகள்.

- விஷ்வக்சேனன்

கிரிக்கெட், இலக்கியம், பிக்பாஸ் குறித்து எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘நிறமற்ற நிறமாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in