கோயில் கருவறைப் புகுதல்: கேப்டன் மில்லர் விமர்சனம்

தனுஷ் குறைவாகப் பேசினாலும், அவர் பேசும் இடங்களில் வசனங்கள் அனைத்தையும் தீயாய் எழுதியிருக்கிறார்கள்..
கோயில் கருவறைப் புகுதல்: கேப்டன் மில்லர் விமர்சனம்
படம்: எக்ஸ் தளம் | தனுஷ்

ஒருபுறம் பிரிட்டிஷ், மறுபுறம் ஊர் சமஸ்தானம் என இருதரப்பும் அடிமைப்படுத்தி வரும் ஊர் மக்களிலிருந்து ஒரு வீரன் எழுச்சி பெறுகிறான். இருதரப்பையும் அடித்து நொறுக்கும் வீரன், இறுதியில் கோயில் கருவறைப் புகுதலை நடத்தி புரட்சி செய்கிறான். இதுதான் கேப்டன் மில்லர்.

தனுஷின் தாயார் கதை சொல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. வாழும் நிலப்பரப்பின் வரலாற்றை ஊர் மக்களிடம் எடுத்துரைப்பது போன்ற காட்சி அமைப்பின் மூலம் பார்வையாளர்களிடம் கதையினுடைய மூலக் கருவை சொல்கிறார் அருண் மாதேஸ்வரன்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தனுஷின் அண்ணன் கதாபாத்திரமாக வரும் சிவராஜ்குமார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தலைமறைவாக இருந்து போராடி வருகிறார். தம்பியாக வரும் தனுஷ் ஆங்கிலேயர்கள் பட்டாளத்தில் சேர முனைகிறார். அண்ணன் இப்படி இருக்கும்போது, தம்பி நேர்மாறாக இருப்பதற்கான காரணத்தை மிக வலுவாகப் பதிவு செய்திருப்பது படத்தின் பலம். இந்தப் பகுதியை விளக்கும் இடத்தில் வசனமும் வலுவாக எழுதப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் வாயிலாக கதை விவரிப்பது சமீப ஆண்டுகளில் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த சமூக முரண் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதுபோல உருவாக்கியிருப்பது அருண் மாதேஸ்வரனுக்கு சாதகமாக வந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களில் சுதந்திரம் என்றால் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவது மட்டுமே திரைப்படங்களில் பார்த்து வந்த வழக்கம் இருக்கிறது. நம் பாட்டன், முப்பாட்டன் கட்டிய கோயிலுக்குள் நம்மை அனுமதிக்காதவனிடம் சுதந்திரத்தை வாங்கிக்கொடுப்பதுதான் உண்மையான சுதந்திரமா என்கிற கோணம் சுதந்திரகால கதைகளுக்குப் புதிது. இந்தக் கேள்வியின் அடிப்படையில் மரியாதையை நோக்கி தனுஷ் எடுக்கும் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன, அது அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது, யாருக்கெல்லாம் கேடு விளைவிக்கிறது என்பதை காதுகளைத் துளைக்கும் தோட்டா சப்தங்களுக்கு நடுவே அதிரடியாகக் கூறியிருக்கிறார்கள். அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு அனுமதி மறுப்பு, கோயில் பெயரில் காக்கப்பட்டு வரும் ரகசியங்களின் பின்னணியில் மாற்றி எழுதப்படும்/மறைக்கப்படும் வரலாறு என்னவென்பதையும் உடைத்துக் கூறியிருக்கிறார்கள்.

தனுஷின் அறிமுகக் காட்சியிலிருந்தே திரைக்கதை விவரிப்பில் பொறி பறக்கத் தொடங்குகிறது. காட்சி அமைப்புகளை முன்னும் பின்னும் காட்டி, மாஸ் உணர்வை மிகச் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறது படக்குழு. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை என மூன்று பிரிவும் இதற்கு சிறப்பான உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். இந்த உழைப்பு எதுவும் வீண் போகவில்லை. திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்களில் இதன் பலனை உணரலாம்.

குறிப்பாக முதல் பாதி முடிவதற்கு முந்தைய 10, 15 நிமிடங்கள் ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெறும். இந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதம் பரபரப்பாக இருக்கிறது. காட்சியின் நீளம் கூடுதலாக இருந்தாலும், அந்த உணர்வு எதுவும் பார்வையாளர்களுக்கு வந்துவிடாதவாறு ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். படத்தில் தனுஷ் பெரிதாகப் பேசுவதில்லை. ஆனால், அவர் பேசும் இடங்களில் வசனங்கள் அனைத்தையும் தீயாய் எழுதியிருக்கிறார்கள் அருண் மாதேஸ்வரன் மற்றும் மதன் கார்க்கி. பட்டாளத்தில் சேர்வதற்கான காரணத்தை விளக்கும் இடம், நான் பாத்திரத்தைக் கழுவுகிறேன் நீ துப்பாக்கியை சுத்தம் செய்கிறாய் என நிவேதிதாவிடம் பேசுவது என சிறப்பான வசனங்களை மிகச் சாதாரணமாகப் பேசவைத்துள்ளார்கள். மேலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு நடுவே உயர் சாதியில் பிறந்திருந்தால்கூட பெண்கள் அடிமைகள் தான் என்பதை இளவரசியின் வாயிலாக சொல்ல வைத்த வசனங்களும் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

திரைக்கதையில் சிறிது நேரம் அமைதி நிலவினால், அடுத்தப் பகுதியில் உடனடியாக ஏதேனும் நிகழ்வுகளை உண்டாக்கி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டு ரசிகர்களின் மனம் தொய்வடையாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப கேமிரா கோணங்கள், சூழலுக்கு ஏற்ப வரும் பரபரப்பான மற்றும் மெதுவான ஷாட்கள் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறது. தனுஷ், பிரியங்கா மோகன் இடையிலான காட்சிகளை வழக்கமான காதல் காட்சிகளாக அல்லாமல் மாற்றி முயற்சித்திருக்கிறார். கதையிலிருக்கும் தொய்வை இப்படியான கண்கட்டி வித்தை மூலம் அருண் மாதேஸ்வரன் சரியாக சரிகட்டியிருக்கிறார்.

படம் முழுக்க தோட்டாக்கள் தெறிக்கிறதே, இறுதிக் காட்சியிலும் இதேதான் நிகழப்போகிறது என்றால், அதில் சுவாரசியம் இருக்காது. இதைச் சீர்ப்படுத்த சந்தீப் கிஷன், வினோத் கிஷன் உள்ளிட்டோரை ஜெயிலர் படப் பாணியில் இறுதியில் சிறப்பாகப் பயன்படுத்தி ரசிகர்களை அதகளப்படுத்தியிருக்கிறது கேப்டன் மில்லர்.

நடிகர்கள் தேர்வும் படத்துக்குப் பக்கபலமாக இருந்தது. பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், இளங்கோ குமரவேல், வினோத் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா, அதிதி பாலன் என எவரும் குறை கூற முடியாத வகையில் தங்களது பணியைச் செய்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் தான் படத்தின் முதுகெலும்பு. படம் முழுக்க குண்டுகள் சப்தம் காதுகளைத் துளைத்தாலும்கூட அதைத் தாண்டி ஜி.வி. பிரகாஷின் இசை காதுகளைத் துளைக்கிறது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகப் பின்னணி இசை பேசப்படும்.

படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும், அது வெளியில் தெரியாதவாறு சிறப்பாக 'பேக்கேஜ்' செய்யப்பட்டு கருவறை நுழைவு உரிமையைப் பேசும் வகையில் பொங்கல் போரில் களமிறக்கப்பட்டுள்ளார் கேப்டன் மில்லர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in