‘அன்னபூரணி’க்குச் சிக்கல்: எதிர்ப்பும் நீக்கமும் நியாயமானதா?

திரையரங்கை விடவும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
‘அன்னபூரணி’க்குச் சிக்கல்: எதிர்ப்பும் நீக்கமும் நியாயமானதா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் தமிழில் வெளியான அன்னபூரணி திரைப்படம், பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆனால், ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான பத்து நாள்களில் நாடு முழுவதும் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுவதாக உறுதியளித்தது.

அதுவரை அன்னபூரணி படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது எனவும், எவ்வித உள்நோக்கமும் இன்றி படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், யாரையாவது காயப்படுத்தும் விதத்தில் இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்குக் கடிதம் எழுதியிருந்தது.

சமையற்கலையில் சாதிக்க விரும்பிய ஒரு பெண்ணின் கதையாகப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தாலும் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட காட்சிகளால் படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அசைவ உணவு தயாரிக்கத் தயங்கும் பெண்ணை, அவரது இஸ்லாமிய நண்பர் சமாதானப்படுத்துகிறார். ராமாயணத்தில் ஸ்ரீராமரே மாமிசம் உட்கொண்டதாக வசனம் உள்ள காட்சிதான் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சிகளில் பிரியாணி செய்வதற்கு முன்னதாக நயன்தாரா தொழுகை செய்வதும், தொழுகை செய்துவிட்டு பிரியாணி சமைத்தால் சுவையாக இருக்கும் என்று விளக்கம் தருவதும் இந்துக்களை மட்டுமல்ல இஸ்லாமியர்களையும் சங்கடத்தில் ஆழ்த்துவதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜீ ஸ்டூடியோஸ் உடனடியாக பணிந்து மன்னிப்புக் கடிதம் அனுப்பியதும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனம், தன்னுடைய வர்த்தகத்தைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்காமல், பிரச்னையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்குத்தான் முயற்சி செய்யும் என்கிறார்கள். அதே நேரத்தில் இயக்குநர் உள்ளிட்ட படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. படக்குழுவினருடன் கலந்தாலோசித்த பிறகு ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மன்னிப்புக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கலாம் என்கிறார்கள். மேலும் தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த எதிர்ப்புக்குப் பணிந்து படத்தை ஓடிடியில் நீக்குவதும் மோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதனால் கலைஞர்களின் உரிமை பறிபோனது மட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற மாற்றுக் கருத்துகளைப் படமாக்கும் துணிச்சலும் யாருக்கும் வராமல் போய்விடும் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

திரையரங்கை விடவும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஒவ்வொரு வீட்டின் முன்னறையிலும் அனைவராலும் எவ்வித சங்கடமும் இன்றி பார்க்கக் கூடிய படங்களே வரவேற்பு பெறும் என்பது உறுதியாகியுள்ளது.. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் நேரத்தில் படக்குழு இது போன்ற சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம் என்றும் சிலர் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள். கருத்துச் சுதந்திரமா மத உணர்வுகளா - ஒரு படைப்பாளி எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற கேள்வியும் அதுகுறித்த விவாதங்களும் மீண்டும் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in