வரலாற்றில் முதல்முறையாக...: கோயில் திறப்பு விழாவுக்காக விடுமுறை விடப்பட்ட இந்தியப் பங்குச் சந்தை!

பெருந்தலைவர்கள் இழப்போ, பேரிடரோ, சிஸ்டம் கோளாறுகள் காரணமாகவோ, வர்த்தகத்தைப் பெரும் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கவோ இல்லாமல்...
வரலாற்றில் முதல்முறையாக...: கோயில் திறப்பு விழாவுக்காக விடுமுறை விடப்பட்ட இந்தியப் பங்குச் சந்தை!
ANI

முன்னெப்போதும் இல்லாத வகையில், அயோத்தி கோயிலின் திறப்பு விழாவிற்காகப் பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பங்குச் சந்தை நிறுவனங்கள் இன்று இயங்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமர் கோயில் திறப்புவிழாவுக்காக எல்லா மத்திய அரசு நிறுவனங்களுக்கும் மத்திய நிதி துறை அமைச்சகம் விடுமுறை அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் மருத்துவமனை உள்பட பல அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. வங்கிகள், மதியம் 2.30 மணி வரை இயங்காது என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் பலருக்கும் ஆச்சர்யமளித்தது, பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுதான்.

மேலும், இன்று விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாகக் கடந்த சனியன்று பங்குச் சந்தை நிறுவனங்கள் இயங்கின. முதலில், முக்கியப் பங்குச் சந்தைகளான NSE எனப்படுகிற 'தேசியப் பங்குச் சந்தை’யும் BSE எனப்படுகிற 'பம்பாய் பங்குச் சந்தையும்' தங்களது டிசாஸ்டர் ரெகவரி சிஸ்டத்தைச் சோதிக்கப் போவதாக அறிவித்து, அதன் காரணமாக சனிக்கிழமையன்று பங்குச் சந்தையின் வர்த்தகம் இயங்கும் என்று அறிவித்தன. அதையே எல்லா ஊடகங்களும் மக்களுக்கு அறிவித்தன. கடைசி நேரத்தில், அந்தச் சோதனை நடைபெறப்போவதில்லை என்றும் ஆனாலும் அன்றைய தினம் பங்குச் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவித்தன. அதேபோல சனிக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை இயங்கியது.

பேரிடரோ, சந்தை சார்த்த முக்கிய நிகழ்வோ இல்லாமல் சனிக்கிழமை வர்த்தகம் இயங்கியது அதுவே முதல்முறை. 2020-ல் மத்திய நிதிநிலை அறிக்கை, சனிக்கிழமையன்று வெளியானதால், அன்றைய தினம் பங்குச் சந்தை வர்த்தகம் இயங்கியது. சிலநேரங்களில் முன்பு கூறியதுபோல பங்குச் சந்தை நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் சோதித்துப் பார்க்க சனிக்கிழமைகளில் இயங்கின.

தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி, கடந்த சனிக்கிழமை முடிவில் 109 புள்ளிகள் உயர்ந்து 21,571 புள்ளிகளோடு முடிந்தது. மும்பைப் பங்குச் சந்தையான சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 73423 புள்ளிகளில் முடிந்தது.

வழக்கமாக இருநாள் விடுமுறைக்குப் பிறகு பங்குச் சந்தை பரபரப்பாக இயங்கும் திங்கள் அன்று விடுமுறை விடப்பட்டது இயல்பான ஒன்றல்ல. வரலாற்றில் இதுபோல பங்குச் சந்தை இயங்காமல் போனதற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

இதற்கு முன்பு, பல சமயங்களில் சிஸ்டம் கோளாறுகளால் வர்த்தகம் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, 2012-ல் மின்சாரத் தடையால் வர்த்தகம் நின்றது. 1999-ல் ஒய்2கே எனும் சிஸ்டம் சிக்கலால் பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1993, 2001 ஆகிய ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதலால் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

1984-ல் இந்திரா காந்தியின் படுகொலை காரணமாகவும், 2020-ல் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மறைவு காரணமாகவும் பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனால் பெருந்தலைவர்கள் இழப்போ, பேரிடரோ, சிஸ்டம் கோளாறுகள் காரணமாகவோ, வர்த்தகத்தைப் பெரும் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கவோ இல்லாமல் ஒரு கோயிலின் திறப்பு விழாவுக்காகப் பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

- ஹசன் அலி

www.siptiger.com

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in