சரிந்த சென்செக்ஸ்: எச்டிஎஃப்சி தவிர வேறு என்ன காரணங்கள்?

நிஃப்டி கடந்த அக்டோபர் மாதம் 21,000 புள்ளிகளில் இருந்து 18,800 புள்ளிகள் வீழ்ச்சிக்குப் பின் அங்கிருந்து தொடர் ஏறுமுகமாக 22,000 புள்ளிகள் வரை நிற்காமல் ஓடியது.
சரிந்த சென்செக்ஸ்: எச்டிஎஃப்சி தவிர வேறு என்ன காரணங்கள்?
ANI

இன்று இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

புதன் அன்று (17.1.24) 22,032-ல் ஆரம்பித்த நிஃப்டி, 21,851 மற்றும் 21,550 என்கிற அளவுக்குச் சென்றுவிட்டு, நாள் முடிவில் 21,571-ல் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 1,628 புள்ளிகளை இழந்து 71,500 ஆக உள்ளது. இரண்டின் இன்டெக்ஸும் சுமார் 2% மேல் இழந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் - எச்டிஎஃப்சி வங்கி பங்கின் வீழ்ச்சி. இதனாலேயே சென்செக்ஸ் இன்று 700 புள்ளிகளை இழந்துள்ளது. அதன் துணைக்கு ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கிகளும் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டன.

எச்டிஎஃப்சி வங்கி தன் காலாண்டு நிதி அறிக்கையில் கடந்த ஆண்டை விட 33% அதிக லாபம் பெற்றுள்ளதை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 10,055 கோடியில் இருந்து ரூ. 16,373 கோடியாக அதன் லாபம் உயர்ந்துள்ளது. இருப்பினும் எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் இன்று 8.5% வீழ்ச்சி அடைந்துள்ளன.

இந்த நிலைமைக்கு மூன்று முக்கியக் காரணங்கள்:

1 . நெட் இன்ட்ரஸ்ட் மார்ஜின் எனப்படும் நிகர வட்டி வருவாய் சதவீதம் 3.4% அளவில் உள்ளது. இது எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனம் இணைப்புக்கு முன் உள்ள 4% அளவைவிடக் குறைவு.

2 . லோன் டு டெபாசிட் ரேஷியோ LDR எனப்படும் வைப்புநிதிக்கும் கடன் நிதிக்கும் உள்ள வேறுபாடு விகிதம் 110 % என்னும் அளவில் உள்ளது. அதாவது, 100 ரூபாய் டெபாசிட் தொகைக்கு 110 ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இது வங்கியின் பொருளாதார நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

3 . லிக்விடிட்டி கவரேஜ் ரேஷியோ (LCR) என்கிற ஆர்பிஐ-யிடம் வைக்கப்படும் நிதி 120%-ல் இருந்து, 110% சதவீதமாக எச்டிஎஃப்சி வங்கி குறைத்துள்ளது. இந்த நிதி பேலன்ஸ் ஷீட்டில் வருவாயாகக் காண்பிக்கப்பட்டு பிறகு அதிகக் கடனைக் கொடுத்துள்ளது என்று என்றும் முதலீட்டாளர்கள் அச்சப்படுகின்றனர்.

*

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் கிறிஸ்டோபர் வாலர், வட்டிக் குறைப்பு எதிர்பார்த்தபடி வேகமாகக் குறைய வாய்ப்பில்லை என்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போதிருக்கும் வட்டி விகிதத்திலேயே ஆரோக்கியமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இது அந்நாட்டு பங்குச் சந்தையில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தி வீழ்ச்சியை உண்டாக்கியது. இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) பங்கு முதன்மையானதாக உள்ளது. வாலரின் கூற்று, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடுகளைக் குறைக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது.

இந்த வருடம், அமெரிக்கா தன் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் வாலரின் கூற்று, அந்நாட்டுப் பத்திர விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் FII முதலீடுகளை அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்யவைக்கும்.

அமெரிக்க டாலரும், கடந்த மாத அளவில் புதிய உச்சத்தில் முடிந்தது. கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியின் அறிக்கையின்படி, 2024-2025-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா துரிதப்படுத்தும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் எதிர்பார்க்கிறது.

செங்கடலின் பதற்றத்தால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று ஜப்பானில் உள்ள சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான நொமுரா அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கியதையடுத்து ஹௌதி எனும் போராளிக்குழு செங்கடலின் வழியே வரும் சரக்குக் கப்பல்களை தாக்குகின்றன. அதனால் சரக்குக் கப்பல்கள் மிக நீண்ட வழித்தடமான ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் நிலையில் உள்ளன.

மேலும், நொமுரா நிறுவனம், இந்தியாவின் கரண்ட் அக்கவுண்ட் பற்றாக்குறை 1.6% அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

*

நிஃப்டி கடந்த அக்டோபர் மாதம் 21,000 புள்ளிகளில் இருந்து 18,800 புள்ளிகள் வீழ்ச்சிக்குப் பின் அங்கிருந்து தொடர் ஏறுமுகமாக 22,000 புள்ளிகள் வரை நிற்காமல் ஓடியது. மார்க்கெட் அதிகமான விலையில் டிரேட் ஆவதாக மக்கள் எண்ணுகிறார்கள்.

மார்க்கெட் எந்தநேரத்திலும் கீழே விழலாம் என்று ஷார்ட் பொசிஷன் இந்த மாதம் நிறைய எடுத்திருக்கிறார்கள். அதுவே மார்க்கெட் ஏறுவதற்குக் காரணியாக இருந்தது. இருந்தாலும் மார்க்கெட் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்கிற பயம் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறது.

இப்போது மார்க்கெட் அதிக விலையில் தான் உள்ளது என்று கோல்ட்மேன் சாக்ஸ் சொல்கிறது. இந்த ஏற்றம் இனிவரும் நிதி நிலை அறிக்கைகள் நியாயப்படுத்த வேண்டும், தவறினால் மார்க்கெட் மேலும் கீழே இறங்கலாம்.

இதுபோன்ற செய்திகள் வருகிறபோது லாபத்துடன் வெளியே வந்துவிடலாம் என்று மக்கள் அங்கிருந்து வெளியே வரப் பார்ப்பார்கள். கையில் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இப்போது உள்ளே நுழைய சந்தர்ப்பம் பார்ப்பார்கள். ஒருவேளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக முதலீட்டுடன் உள்ளே வந்தால் மார்க்கெட் இறங்காது, மீண்டும் மேலே செல்லும்.

வாலர் சொன்னது போல உள்ளே வரும் பணம், பயத்தினால் நின்றுபோனால் லாபத்துடன் வெளியேறலாம் என மக்கள் விற்றுக்கொண்டே இருப்பார்கள். அப்படி விற்றால் நிஃப்டி 20,200-க்குப் போக வாய்ப்புள்ளது.

- ஹசன் அலி

www.siptiger.com

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in