போலந்து நாட்டு பிரதமர் டோனால்ட் டஸ்குடன் அந்நாட்டுத் தலைநகர் வார்ஷாவில் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான அரசு உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, `எனது நண்பர் பிரதமர் டோனால்ட் டஸ்க் அவர்களைச் சந்தித்தில் மகிழ்ச்சி. எங்கள் பேச்சுவார்த்தையில் இந்தியா போலந்து உறவுகள் குறித்து முழுமையாக ஆராய்ந்தோம். உணவு பதப்படுத்துதல், நகர உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்க ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் செய்தியாளர் சந்திப்பில், `போலந்தில் இருந்து 20 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தரும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்தார் பிரதமர் மோடி.
நடந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து கருத்து தெரிவித்த போலந்து பிரதமர் டோனால்ட் டஸ்க், `அமைதியான, சரியான முறையில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு தன்னுடைய இசைவை தெரிவித்தார் பிரதமர் மோடி. இந்த விவகாரத்தில் இந்தியாவால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடியின் உக்ரைன் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்’ என்றார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, வார்ஷா நகரத்தில் உள்ள `அறியப்படாத சிப்பாயின் நினைவிடத்தில்’ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. போலந்தைக் காக்க உயிரிழந்த பெயர் தெரியாத வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து பயணத்தின் அடுத்த கட்டமாக போலந்திலிருந்து 10 மணி நேரம் ரயிலில் பயணித்து மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. 8 மணி நேரம் உக்ரைனில் பிரதமர் மோடி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.