நாட்டின் அனைத்துப் படிநிலைகளிலும் உள்ள நீதிபதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்தெடுக்கும் நடைமுறை கடந்த செப்.15-ல் இருந்து மெக்ஸிகோவில் நடைமுறைக்கு வந்தது.
பதவிக்காலம் முடியும் தறுவாயில் உள்ள மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் லோபஸின் தீவிர முயற்சியின் காரணமாக நீதிபதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்தெடுக்கும் புதிய நடைமுறை அந்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. மெக்ஸிகோ அரசின் முக்கிய முடிவுகளை அமல்படுத்துவதில் ஆண்ட்ரெஸுக்கும், அந்நாட்டு நீதிமன்றத்துக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு நிலவி வந்தது
இதை அடுத்து நீதிபதிகள் பதவிக்குத் தகுந்த நபர்களை நியமிக்கும் முறையை மாற்றி, பொதுமக்களே நேரடியாக நீதிபதிகளைத் தேர்தெடுக்கும் வகையிலான திருத்தச்சட்டத்துக்கு மெக்ஸிகோ நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இந்த மாற்றம் மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டபோதே அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நார்மா ஹெர்னான்டெஸ் இதைக் கடுமையாக எதிர்த்தார்.
இந்த நடைமுறை மாற்றம் குறித்துக் கருத்து தெரிவித்த ஆண்ட்ரெஸ் லோபஸ், `இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் நீதித்துறையில் ஊழல் இருக்கக்கூடாது. சட்டத்துக்கு வெளியே எதுவும் கிடையாது, யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது’ என்று பேசியுள்ளார். ஆண்ட்ரெஸ் லோபஸின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 1-ல் முடிவுக்கு வருகிறது.
மெக்ஸிகோ நாட்டு எதிர்க்கட்சிகள் இந்தப் புதிய நடைமுறையைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். நீதிபதிகளை நேரடியாக மக்கள் வாக்களித்துத் தேர்தெடுக்கும் முறை உலகில் வேறு எங்குமே கிடையாது, இந்தப் புதிய நடைமுறையால் குற்றவாளிகளின் செல்வாக்கிற்கு நீதிபதிகள் அடிப்பணியக்கூடும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.
2025 அல்லது 2027-ல் இந்த நடைமுறை அமலுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே போதைப்பொருள் மாஃபியாக்கள் அதிகளவில் உள்ள மெக்ஸிகோ நாட்டில் இந்தப் புதிய நடைமுறயால் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.