வெள்ளிக் கோளுக்கு சுக்ரயான் விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோவின் தயாரிப்பில் பூமிக்கு அருகே உள்ள வெள்ளிக் கோளுக்கு அனுப்பப்பட இருக்கும் இந்தியாவின் முதல் விண்கலத்துக்கு `சுக்ரயான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உயர்ரக கருவிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக் கோளின் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் புவியியல் அம்சங்களை ஆராய உள்ளது சுக்ரயான் விண்கலம்.
வெள்ளிக் கோளுக்கு அனுப்பப்படும் இந்த சுக்ரயான் திட்டத்துக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை. இந்த ஒப்புதலின்படி, சுக்ரயான் விண்கலம் மார்ச் 2028-ல் வெள்ளிக் கோளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில், சூரியனில் இருந்து இரண்டாவது இடத்தில் பூமிக்கு அருகே உள்ளது வெள்ளிக் கோள். பூமிக்குச் சமமான அளவையும், அடர்த்தியையும் கொண்ட வெள்ளிக் கோளை ஆராய்ந்தால், பூமியின் பரிணாமம் குறித்த பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.
மேலும், தற்போது உலர்ந்த நிலையில் உள்ள வெள்ளிக் கோளில் முன்பு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சூரியனில் இருந்து இரண்டாவது இடத்தில் இருந்தாலும், சூரியனுக்கு அருகே உள்ள புதன் கோளைவிட வெள்ளிக் கோளின் மேற்பரப்பு அதிக வெப்பமானதாகும். வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் உள்ள பசுமை இல்ல வாயுக்கள் (green house gases) இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் இ.எஸ்.ஏ. உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் வெள்ளிக் கோளுக்கு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.