கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், அந்தப் பள்ளி என்.சி.சி மாணவர்களுக்காக முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட போலி என்.சி.சி பயிற்சியாளர்கள் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதை அடுத்து பள்ளி மாணவிகள் புகாரின் பேரில் 5 போலி என்.சி.சி பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள், கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு 7 மணி அளவில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
போலி என்.சி.சி பயிற்சியாளர்களால் வேறு பள்ளி, கல்லூரிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கை எடுத்திட காவல்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதை அடுத்து பவானீஸ்வரி தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அரசுக்கு பரிந்துரை வழங்க சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவை அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.