ஆளுநரா? ஆரியநரா?: 'திராவிடநல் திருநாடும்' தவிர்க்கப்பட்டதற்கு முதல்வர் விமர்சனம்

"ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!"
ஆளுநரா? ஆரியநரா?: 'திராவிடநல் திருநாடும்' தவிர்க்கப்பட்டதற்கு முதல்வர் விமர்சனம்
1 min read

ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் (தூர்தர்ஷன் தமிழ்) பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடக்கத்தின்போது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, 'தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு' என்ற வரிகள் தவிர்க்கப்பட்டன.

ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல் இடம்பெற்றுள்ள வரிகள் தவிர்க்கப்பட்டது அரசியல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்புடைய முதல்வரின் பதிவு:

"திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?

தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in